கள்ளக்குறிச்சி மாவட்ட பெண் ஆட்சியருக்கு, அம்மாவட்ட தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆரம்பத்தில் அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்ற ரீதியில் தவெக அமைச்சர்கள் உட்பட பலர் பேசி வந்த நிலையில், கடந்த ஜூலை மாதமே மாவட்ட ஆட்சியர் புகார் அளித்துள்ளார் என்ற செய்தி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் தவெக எம்.எல்.ஏவை காப்பாற்றும் வகையில் நடந்துக் கொண்ட அரசு அதிகாரிகள், அமைச்சர்கள் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
Buy Now ! Pay Daily !
தற்போது இந்த வழக்கை தமிழக காவல்துறை விசாரிக்க உள்ள நிலையில், சிபிஐ-யிடம் வழக்கை ஒப்படைக்க வேண்டும் என திமுக உள்ளிட்ட கட்சிகள் கோரி வருகின்றன. இந்நிலையில் இந்த வழக்கை விசாரிக்க உத்தர பிரதேசத்தை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி ஸ்ருஷ்டி சிங் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்போது திருப்பூர் எஸ்.பியாக உள்ள இவர் இந்த வழக்கில் விசாரணை அதிகாரியாக செயல்பட உள்ளதாகவும், ஐஜி காமினி மேற்பார்வை அதிகாரியாகவும் செயல்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த வழக்கில் அருள் விக்னேஷ் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு குறைந்தபட்சம் 3 ஆண்டுகளாவது சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அருள் விக்னேஷ் மீதான குற்றச்சாட்டு நிரூபணம் ஆனால் அவர் கட்சியிலிருந்து விலக்கப்படுவாரா? கட்சி ஒழுங்கு குழு எடுக்கப்போகும் நடவடிக்கைகள் என்ன? என்பது உள்ளிட்ட கேள்விகளும் எழுந்துள்ளன.






