கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மது அருந்திவிட்டு மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்த குற்றச்சாட்டு கடந்த சில வாரங்களாகவே பரபரப்பை ஏற்படுத்தி வந்தது. இந்த விவகாரத்தில் அப்படி எதுவும் நடக்கவில்லை என அருள் விக்னேஷ் கூறி வந்த நிலையில், ஆட்சியர் புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என பிற தவெக அமைச்சர்கள் பேசி வந்தனர்.
இதற்கிடையே, இந்த விவகாரம் குறித்து விசாரித்து அறிக்கை அளிக்குமாறு தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து உத்தரவிட்டது. அதை தொடர்ந்து இதுகுறித்து கருத்துகளை கேட்டு விளக்கம் அளிக்க தலைமைச் செயலாளர், மாவட்ட கலெக்டருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில்தான் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீது மாவட்ட ஆட்சியர் முறைப்படி புகார் அளித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
Buy Now ! Pay Daily !
இது குறித்த செய்திகள் நாளேடுகளிலும் இடம்பெற்றுள்ள நிலையில் அதை சுட்டிக்காட்டியுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ” இத்தகைய ஒரு சம்பவம் நடைபெற்றதாக பல வாரங்களுக்கு முன்பு செய்திகள் வெளிவரத் தொடங்கியபோதே, முதலமைச்சரும் தலைமைச் செயலாளரும் மாவட்ட ஆட்சியரை அழைத்துப் பேசி இருக்க வேண்டும். அவருக்கு உறுதுணையாக அரசு இருக்கும் என்ற நம்பிக்கையை அளித்திருக்க வேண்டும்.
தவறிழைத்த சட்டமன்ற உறுப்பினரைக் கண்டித்து, சட்டநடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். பெண்களின் பாதுகாப்பிற்கும், ஆட்சி மாண்பிற்கும் முக்கியத்துவம் அளிக்கும் எந்த ஒரு அரசும் இதைத்தான் செய்திருக்கும்.
ஆனால், தன் கட்சி சட்டமன்ற உறுப்பினரையும் தன் மைனாரிட்டி அரசையும் காப்பாற்றினால் போதும் என்ற நோக்கத்தில் இவர்கள் இந்த சம்பவத்தை மறைக்க அனைத்து வகைகளிலும் முயற்சித்ததால்தான், பாதிக்கப்பட்ட பெண் அலுவலர் முறையாகப் புகார் அளிக்கவே இத்தனை நாட்கள் ஆகியிருக்கின்றன.
ஒரு மாவட்ட ஆட்சியருக்கே இந்த நிலைமை என்றால் தமிழ்நாட்டில் வாழும் சராசரிப் பெண்களின் நிலை எப்படி இருக்கும் என்ற கேள்வி கவலை அளிக்கிறது. இதில், பதவிக்கு மாரடிக்கும் சில கட்சித் தலைவர்கள் பாதிக்கப்பட்டவரின் பக்கம் நிற்காமல், MLA பாவம் என்று முட்டு கொடுத்தது கேவலத்தின் உச்சம்.
பல்வேறு வகைகளிலும் இந்த சம்பவம் அரசின் கவனத்திற்கு வந்த பிறகும், இந்த அரசு நடவடிக்கை எடுக்காமல் நீதிமன்றத்திலும் பொய் சொல்கிறார்கள் என்பது கடும் கண்டனத்துக்குரியது.
பாலியல் குற்றங்களிலும், போதைப் பொருள் கடத்தலிலும், கொள்ளைச் சம்பவங்களிலும் த.வெ.க.வினர்தான் அதிகம் ஈடுபடுகிறார்கள் என நாங்கள் தொடர்ந்து சொல்லி வருவது ஒவ்வொரு நாளும் உண்மையாகி வருகிறது. இனியும் தாமதிக்காமல், கள்ளக்குறிச்சி த.வெ.க. சட்டமன்ற உறுப்பினரைக் கைது செய்து விசாரிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக மாவட்ட ஆட்சியர் புகார் அளித்தால் தக்க நடவடிக்கை எடுப்போம் என தவெக அமைச்சர்கள் பேசியிருந்தனர். அதுமட்டுமல்லாமல் தனது ஆட்சியில் பெண்களுக்கு எதிரான எந்த வன்முறையையும் பொறுத்துக் கொள்ள மாட்டேன். அது யாராக இருந்தாலும் தண்டனை நிச்சயம் என பல மேடைகளில் முதலமைச்சர் விஜய் பேசியிருந்தார். இந்நிலையில் தற்போது இந்த புகார் வெளிச்சத்திற்கு வந்துள்ள நிலையில் இதுகுறித்து முதலமைச்சர் விஜய் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்? என்பதுதான் பலரது எதிர்பார்ப்பாக இருக்கிறது.






