← முகப்பு

தவெகவுக்கு வக்காலத்து வாங்குறதுதான் காங்கிரஸின் வேலையா? – வானதி சீனிவாசன் காட்டம்!

கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் விவகாரத்தில் கைது தேவையற்றது என காங்கிரஸ் எம்.பி கார்த்திக் சிதம்பரம் பேசியுள்ளதற்கு பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தவெகவுக்கு வக்காலத்து வாங்குறதுதான் காங்கிரஸின் வேலையா? – வானதி சீனிவாசன் காட்டம்!

கள்ளக்குறிச்சி மாவட்ட பெண் ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதுடன், அவர் வீட்டிற்குள்ளும் அத்துமீறி நுழைந்ததாக தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீது புகார் அளிக்கப்பட்டு 5 பிரிவுகளின் கீழ் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரிக்க சிறப்பு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, அருள் விக்னேஷ்க்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

காங்கிரஸ் சர்ச்சை பேச்சு

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

இந்த விவகாரம் கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக பூதாகரமாக வெடித்த நிலையில் தான் எந்த தவறும் செய்யவில்லை என அருள் விக்னேஷ் மறுத்தார். அப்போது தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர், கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பாவம் என பேசியிருந்தது பின்னர் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவர் மீது தவறு இருந்தால் நடவடிக்கை தேவை என்றுதான் தான் பேசியதாக விளக்கம் அளித்தார் மாணிக்கம் தாகூர்.

இந்நிலையில் தற்போது கள்ளக்குறிச்சி விவகாரம் குறித்து பேசிய காங்கிரஸ் எம்.பி கார்த்திக் சிதம்பரம் ’இந்த விவகாரத்தில் கைது நடவடிக்கை தேவையற்றது. இதில் மட்டுமல்ல எதிலுமே கைது நடவடிக்கைகளில் எனக்கு உடன்பாடில்லை’ என பேசியிருந்தார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வானதி சீனிவாசன் கண்டனம்

இதுகுறித்து பாஜக எம்.பி வானதி சீனிவாசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர் ” தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீதான புகாரில் கைது நடவடிக்கை தேவையில்லை என காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் கூறியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது!

ஏற்கனவே மாணிக்கம் தாகூர் அவர்கள் முன்னதாக ஆதரவுக் குரல் கொடுத்த நிலையில், தற்போது மற்றொரு காங்கிரஸ் எம்.பி.யும் களமிறங்கியிருப்பது பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைப்பதைவிட, கூட்டணிக் கட்சி எம்.எல்.ஏ.வைக் காப்பாற்றுவதில்தான் காங்கிரஸ் அதிக அக்கறை காட்டுகிறதோ என்ற கேள்வியை எழுப்புகிறது.

இரண்டு அமைச்சர் பதவிகளுக்காக ஒட்டுமொத்த கட்சியின் சுயமரியாதையையும் அடகு வைத்து, தவெக-வின் தவறுகளுக்கெல்லாம் முட்டுக்கொடுப்பதுதான் தமிழக காங்கிரஸின் அரசியலா? பணியிடப் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பெண்ணுக்கு ஆதரவாக நின்று நீதி பெற்றுத் தருவதுதான் மக்கள் பிரதிநிதிகளின் கடமை. மாறாக, கைது நடவடிக்கை கூடாது என்று முன்கூட்டியே வக்காலத்து வாங்குவது அல்ல!

கைது செய்ய வேண்டுமா, வேண்டாமா என்பதைச் சட்டமும், காவல்துறையும், நீதிமன்றமும் தீர்மானிக்கட்டும். ஆனால், புகாரின் தீவிரத்தைச் சிறுமைப்படுத்தி, பாதிக்கப்பட்டவரின் நீதிக்கான குரலை அரசியல் காரணங்களுக்காக நசுக்க முயல்வதை ஒருபோதும் ஏற்க முடியாது.

எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் போன்று நாளை இன்னொருவர் உருவாகக் கூடாது என்பதற்காகவே கைது நடவடிக்கை கட்டாயம் வேண்டும் அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

கூட்டணி தர்மத்தைவிடப் பெண்களின் கண்ணியத்திற்கு முதலில் மதிப்பளித்து குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களைக் காப்பாற்றத் துடிப்பதை நிறுத்தி பாதிக்கப்பட்டவருக்கு நீதி கிடைக்கக் குரல் கொடுங்கள் கார்த்திக் சிதம்பரம் அவர்களே..!” எனக் கூறியுள்ளார்.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !