தமிழக சட்டமன்றத்தில் கொளத்தூர் உட்பட 6 தொகுதிகள் காலியானதாக உள்ள நிலையில், தற்போது அம்பாசமுத்திரம் மற்றும் பெருந்துறை தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த சென்னை உயர்நீதிமன்றம் தேர்தல் ஆணையத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது. விரைவில் இந்த இரண்டு தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இப்போதே இந்த தொகுதிகளில் தேர்தல் பரபரப்பு தொடங்கியுள்ளது.
முக்கியமாக அம்பாசமுத்திரத்தில் சீமான் போட்டியிடுவது முன்பே கூறப்பட்டிருந்த நிலையில், அங்கு சீமானின் நாம் தமிழர் கட்சி தீவிரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் அம்பாசமுத்திரத்தில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு சீமான் பேசினார்.
Buy Now ! Pay Daily !
அப்போது அவர் ”இந்த மாவீரர் நாளிலே ஒரு நல்ல அறிவுரைச் சொல்கிறேன். நமது சொந்தங்கள் யாரும் எந்த காலத்திலும் தவெகவினருடன் அரசியல் பேசாதீர்கள். அரசியல் என்றால் என்ன? என்று அவர்களுக்கும் தெரியாது, அவர்களது தலைவனுக்கும் தெரியாது.
அம்பாசமுத்திரத்தில் எதற்காக கூட்டம். கூட்டம் போடுவேன்.. போட்டியிட்டு வென்று காட்டுவேன். அந்த அவையிலே எனக்கு உயிர்பால் ஊட்டிய தாயின் மீது, அறிவுப்பால் ஊற்றிய தமிழின் மீது, என் உயிருக்கும் மேலான மேதகு தலைவன் மீது உறுதியேற்று முழக்கத்தை வைப்பேன். எந்த கொம்பனாலும் என்னை தடுக்க முடியாது. எவ்வளவு கோடிகள் நீங்கள் செலவழித்தாலும் சரி.. நான் வெல்வது உறுதி.
என்னுடைய இலக்கு வீட்டுக்கு ஒரு ஓட்டு. என் மொத்த பிள்ளைகளும் வருவார்கள். கட்டுச்சோறு, கருவாடு கட்டிக் கொண்டு வந்து படுத்துவிடுவோம். எங்களுக்கு ஒரு கனவு இருக்கிறது. செஞ்சியில் குழந்தையை கடத்திய விவகாரம் என்ன ஆனது தெரியவில்லை. ஆனால் இவர்கள் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு காதல் கடிதம் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். மேகதாது அணை கட்டியே தீருவோம் என சொல்லும் கர்நாடக முதலமைச்சருடன் நமது முதலமைச்சர் கட்டிப்பிடித்தபடி நிற்கிறார்” என பேசியுள்ளார்.






