நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் உள்ளிட்ட பலர் நடித்து உருவான படம் ’ராமாயணா-1’. இரண்டு பாகங்களாக உருவாக்கப்பட்டுள்ள இந்த படம் 4 ஆயிரம் கோடி பொருட்செலவில் தயாரிக்கப்பட்டுள்ளது. தற்போது ராமாயணா முதல் பாகம் வெளியான நிலையில் உலகம் முழுவதும் 1,790 கோடி வசூலித்துள்ளது. தொடர்ந்து பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது.
இந்நிலையில் இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியானபோதே சீதை கதாப்பாத்திரத்தில் சாய் பல்லவி நடித்துள்ளது குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. சீதை கதாப்பாத்திரத்திற்கு சாய் பல்லவி பொறுத்தமற்றவர் என்றும், வட இந்திய நடிகைகள் யாராவது நடித்திருக்கலாம் என்றும் சமூக வலைதளங்களில் பேசிக் கொண்டார்கள். ஆனால் அதையெல்லாம் தாண்டி சீதையாக சாய் பல்லவி சிறப்பாக தன் நடிப்பை வெளிப்படுத்தியிருப்பதாக படம் வெளியான பிறகு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்தது.
Buy Now ! Pay Daily !
இந்த விவகாரம் குறித்து சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகை சாய் பல்லவி ”சீதா தேவி எப்படி அழகாக இருக்க வேண்டும் என சமூக வலைதளங்களில் வெளியான விமர்சனங்களை நான் பார்க்காமல் இல்லை. ஆனால் இதுபோன்ற விமர்சனங்கள் நம் மன உறுதியை குலைத்துவிடுமானால், நாம் மேலும் உறுதியாக இருக்க கற்றுக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு படத்தில் ஒரு கதாப்பாத்திரத்தில் நடிக்கும்போது அதிலிருந்து ஏதோ ஒன்றை நாம் பெறுகிறோம். அவ்வாறாக சீதையாக நடித்தது என்னுள் தனிப்பட்ட சில மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. அவை எனக்கு மட்டுமே உரியவை” என சாய் பல்லவி தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தேர்வு செய்யும் பல படங்களில் அவருடைய கதாப்பாத்திரம் சிறப்பு வாய்ந்ததாக இருப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், கவர்ச்சி விஷயங்களை தாண்டி அந்த கதாப்பாத்திரம் அந்த கதைக்கு எவ்வளவு முக்கியமானதாக இருக்கிறது என்பதை பார்த்து கதைகளை தேர்வு செய்கிறேன். ஆரம்பத்தில் இது கொஞ்சம் கடினமாக இருந்தது என கூறியுள்ளார்.






