← முகப்பு

ஓட்டு போடாத உங்களுக்கு தெருவிளக்கு எதுக்கு? – விளக்குகளை கழட்டிச் சென்ற வேட்பாளர்?

ராஜஸ்தானில் பஞ்சாயத்து தேர்தலில் தனது மனைவிக்கு ஓட்டுப் போடாத மக்கள் மீது கோபமான நபர் தெருவிளக்குகளை எடுத்துச் சென்ற சம்பவம் வைரலாகியுள்ளது.

ஓட்டு போடாத உங்களுக்கு தெருவிளக்கு எதுக்கு? – விளக்குகளை கழட்டிச் சென்ற வேட்பாளர்?

நாடு முழுவதும் ஆங்காங்கே பஞ்சாயத்து தொடங்கி பாராளுமன்றம் வரை பல தேர்தல்கள் அவ்வப்போது நடந்து வரும் நிலையில், தேர்தலில் வெற்றிபெற பரிசுப்பொருட்கள் தருவதை பலர் வழக்கமாகக் கொண்டுள்ளனர். இவ்வாறு பரிசுப்பொருட்கள் வழங்குவது தேர்தல் ஆணைய விதிமுறைகளின்படி தவறு என்றாலும், மறைமுகமாக இதுபோன்ற செயல்கள் நடந்துக் கொண்டுதான் உள்ளன. ஆனால் ராஜஸ்தானில் நடந்துள்ள ஒரு தேர்தல் சம்பவம் ஆச்சர்யத்தையும், சிரிப்பையும் வரவழைப்பதாக உள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் டோங்க் மாவட்டத்தில் உள்ள பிப்லு பஞ்சாயத்தில் சமீபத்தில் பஞ்சாயத்து தேர்தல் நடந்துள்ளது. இதில் காங்கிரஸ் கட்சி சார்பில் தன்னா லால் என்பவரும், பாஜக சார்பில் ப்ரியங்கா சர்மா என்ற பெண் வேட்பாளரும் போட்டியிட்டுள்ளனர். இந்த பிரியங்கா சர்மாவின் கணவர் அலோக் ஷர்மா. இவர் நிவாய் தொகுதி பாஜக எம்.எல்.ஏ ராம்சஹாய் வர்மாவிடம் உதவியாளராக பணியாற்றி வருகிறார்.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

தனது மனைவிக்கு பஞ்சாயத்து தேர்தலில் சீட் கிடைத்த நிலையில் பம்பரமாக சுற்றி வேலைபார்த்த அலோக் ஷர்மா, கிராம மக்களிடம் நல்ல பெயரை பெற முயன்றுள்ளார். அந்த கிராமத்தில் தெருவிளக்கு அமைக்க வேண்டும் என்பது நீண்ட கால கோரிக்கையாக இருந்து வந்த நிலையில் தேர்தலுக்கு முன்னதாக அலோக் சர்மா தன் சொந்த செலவில் சுமார் 50 தெருவிளக்கு கம்பங்கள் அமைத்துள்ளார். ஆனால் தேர்தல் முடிவுகளில் அவரது மனைவி பிரியங்கா 751 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் தன்னா லாலிடம் தோல்வியடைந்தார்.

இதனால் கோபமடைந்த அலோக் சர்மா தன் மனைவிக்கு வாக்கு செலுத்தாத இந்த மக்களுக்கு தெருவிளக்கு தேவையில்லை என கூறி அவற்றை அனைத்தையும் அகற்றியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து கிராம மக்கள் கூறியபோது, தங்கள் கிராமத்திற்கு தெருவிளக்கு அவசியமாக இருப்பதால் வேட்பாளர்களிடம் தெருவிளக்கு அமைத்துத் தர வேண்டும் என கோரிக்கை வைத்ததாகவும், அதை தொடர்ந்து உடனே தெருவிளக்குகள் வைக்கப்பட்டதாகவும், தற்போது அவை நீக்கப்பட்டிருப்பதாகவும் கூறி வருந்தியுள்ளனர்.

ஆனால் விளக்குகள் அகற்றப்பட்டதற்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என அலோக் சர்மா தரப்பு பேசி வருகிறது. மக்கள் கோரிக்கையை ஏற்று தெருவிளக்குகள் அமைத்ததாகவும், ஆனால் அதை மின்வாரிய அதிகாரிகள் அகற்றிவிட்டதாகவும் அலோக் சர்மா கூறிய நிலையில், இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் செய்தியாளர்கள் பேசியுள்ளனர்.

இதற்கு விளக்கமளித்த மின்வாரிய அதிகாரிகள், சம்பந்தப்பட்ட பகுதியில் மின்வாரிய ஒப்புதல் இல்லாமல் தனிப்பட்ட வகையில் 50 தெருவிளக்கு கம்பங்கள் அமைக்கப்பட்டு மின் இணைப்பும் கொடுக்கப்பட்டுள்ளதாக தங்களுக்கு தகவல் வந்ததாகவும், ஆனால் அதற்கு எந்த அனுமதியும் பெறவில்லை என்பதால் மின்வாரிய ஊழியர்கள் அந்த கம்பங்களை அகற்றியுள்ளதாகவும் கூறியுள்ளனர். ஆக மொத்தத்தில் இந்த அரசு, அரசியல் பஞ்சாயத்தில் அந்த பஞ்சாயத்து மக்களின் தெருவிளக்கு கனவு சில நாட்களுக்கு மட்டும் நனவாகி பின் மறைந்துள்ளது. மீண்டும் தெருவிளக்கு அமைக்கப்படுமா என மக்கள் சோகத்துடன் காத்திருக்கின்றனர்.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !