← முகப்பு

அனைத்து மாநிலங்களிலும் பைக் டாக்சி சேவை! – நிதின் கட்கரி வலியுறுத்தல்!

அனைத்து மாநிலங்களும் பைக் டாக்சி சேவைக்கு அனுமதி அளித்தால் நாட்டின் பொருளாதாரம் மேம்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அனைத்து மாநிலங்களிலும் பைக் டாக்சி சேவை! – நிதின் கட்கரி வலியுறுத்தல்!

நாடு முழுவதும் பல மாநிலங்களில் ஆட்டோ, கார் டாக்சிகள் இருந்து வரும் நிலையில், சமீபமாக பைக் டாக்சி சேவையும் அதிகரித்து வருகிறது. ஆனால் இந்த பைக் டாக்சி சேவைகள் பாதுகாப்பற்றவை என்றும், முறைப்படுத்தப்படாதவை என்றும் தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் உள்ள ஆட்டோ, டாக்சி ஓட்டுனர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் பல மாநிலங்களில் அதிகாரப்பூர்வ அனுமதியாக இல்லாமல் இந்த சேவை தொடர்ந்து பயன்பாட்டில் இருந்து வருகிறது.

சமீபத்தில் டெல்லியில் ’ரைடு’ என்ற பெயரில் நடைபெற்ற வாடகை வாகன சேவைகள் தொடர்பான நிகழ்ச்சியில் மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி கலந்துக் கொண்டார். அப்போது பேசிய அவர் ”மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை 2025ல் வெளியிட்டிருந்த வழிகாட்டு நெறிமுறைகளில் மோட்டார் வாகனங்களை வாடகை அடிப்படையில் பயணிகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களாக இயக்க அனுமதிக்கலாம் என கூறியிருந்தோம். ஆனால் அதை ராஜஸ்தான் மாநிலத்தில் மட்டுமே முழுவதுமாக அமல்படுத்தியிருக்கிறார்கள். உத்தர பிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்களில் பகுதியளவில் நடைமுறைப்படுத்தியிருக்கிறார்கள்.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

அனைத்து மாநில போக்குவரத்து ஆணையர்களையும் அழைத்து இருசக்கர மோட்டார் வாகனங்களை வாடகை பயணத்திற்கு அனுமதிக்க வலியுறுத்தியுள்ளேன். இந்த நடைமுறையால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி வெகுவாக உயரும்” எனத் தெரிவித்துள்ளார்.

அவரது இந்த கருத்து ஆட்டோ, டாக்சி ஓட்டுனர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக பலமுறை பைக் டாக்சி சேவைக்கு எதிர்ப்பு தெரிவித்த ஆட்டோ ஓட்டுனர்கள், தங்களை போல பைக் டாக்சி வைத்துள்ளவர்கள் FC, RC செய்வது போன்ற செலவினங்கள் இல்லை. ஆட்டோவிலோ, டாக்சியிலோ செல்லும் பயணிகள் விபத்துக்குள்ளானால் அவர்களுக்கான காப்பீட்டிற்கும் சேர்த்தே நாங்கள் வாகன காப்பீடு, விபத்து காப்பீடு எடுக்கிறோம். ஆனால் பைக் டாக்சியில் அவ்வாறான காப்பீடு நடைமுறைகள் முறையாக பின்பற்றப்படுவதில்லை. பைக் டாக்சி எளிதாகவும், விலை குறைவாகவும் தெரிந்தாலும் பாதுகாப்பு மிகவும் குறைவானது என்பதை புரிந்துக் கொள்ள வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

ஆட்டோ, டாக்சி ஓட்டுனர்களின் நிலைபாடு இவ்வாறு இருக்க மத்திய அமைச்சரே பைக் டாக்சியை ஊக்குவிக்குமாறு மாநிலங்களுக்கு வலியுறுத்தியுள்ளது மற்ற வாடகை வாகன ஓட்டுனர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !