தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றிப்பெற்று ஆட்சியமைத்த நிலையில், தங்கள் தேர்தல் வாக்குறுதிகளில் பலவற்றை தொடர்ந்து நிறைவேற்றி வருகின்றனர். முன்னதால வெற்றிப்பயணம், தாய் மாமன் தங்க மோதிரம் உள்ளிட்ட திட்டங்கள் நிறைவேற்றப்பட்ட நிலையில் தொடர்ந்து அண்ணன் சீர் உள்ளிட்ட திட்டங்களுக்கான அறிவிப்புகளும் வெளியாகி வருகின்றன. அவ்வாறாக வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்பு திட்டம் குறித்த அறிவிப்புகளும் வெளியாகியுள்ளது.
ஊரகப் பகுதிகளில் வாழும் நலிவடைந்த கைம்பெண்கள், ஆதரவற்ற பெண்கள், திருநர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு வெற்றி ஆடுகள் வளர்ப்பு திட்டத்தின் மூலமாக ஐந்து வெள்ளாடுகள் மற்றும் ஒரு செம்மறியாடு என மொத்தம் 6 ஆடுகள் வழங்கப்படும் என்றும், இது முழுக்க முழுக்க 100 சதவீதம் அரசு மானியத்தில் வழங்கப்படும் என்றும் நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சித்துறை அமைச்சர் மரிய வில்சன் கூறியிருந்தார். இதன்மூலம் 30 ஆயிரம் பேர் பயனடைவர் என்று கூறப்பட்டது.
Buy Now ! Pay Daily !
அந்த வகையில் 2026-27ம் நிதியாண்டில் 30 ஆயிரம் தகுதி வாய்ந்த நபர்களுக்கு 100 சதவீதம் அரசு மானியத்தில் ஆடுகள் வழங்குவதற்காக ரூ.109.75 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க ஆதார் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆதார் எண்ணுக்கு விண்ணப்பித்திருந்து இன்னும் கிடைக்கப் பெறாதவர்கள் பதிவு ரசீதுடன் தங்களது வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு, பாஸ்போர்ட் அல்லது ஓட்டுனர் உரிமம் போன்றவற்றை ஆவணமாக சமர்பிக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.
ஆதார் எண் ஒதுக்கப்படாததாலோ அல்லது அடையாளத்தை உடனடியாக நிரூபிக்க முடியாத காரணங்களாலோ யாருக்கும் திட்டப்பலன்கள் மறுக்கப்படக் கூடாது என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதனால் பயோமெட்ரிக் முறையில் சிக்கல் ஏற்பட்டாலும் ஓடிபி மற்றும் க்யூஆர் கோடு போன்ற பிற முறைகளை பயன்படுத்தி பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் இந்த திட்டத்தில் பயன்பெறுபவர்கள் பட்டியலை தனிப்பதிவேடு வைத்து முறையாக கண்காணிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.






