மருத்துவமனையில் சிகிச்சை மற்றும் கடைசி நாட்கள்
75 வயதான வி.எஸ். பாபு, கடந்த செப்டம்பர் 9, 2026 அன்று நள்ளிரவில் திடீரென ஏற்பட்ட கடுமையான மூச்சுத்திணறல் மற்றும் சுவாசக் கோளாறு காரணமாகச் சென்னையின் அமைந்தகரையில் உள்ள எம்.ஜி.எம். ஹெல்த்கேர் (MGM Healthcare) மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
Buy Now ! Pay Daily !
அவர் அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பல்நோக்கு மருத்துவ நிபுணர்கள் குழு அவரைத் தீவிரமாகக் கண்காணித்து வந்தது. செப்டம்பர் மாதத்தின் பிற்பகுதியில் வெளியிடப்பட்ட மருத்துவமனை அறிக்கைகளில், அவரது உடல்நிலையில் முன்னேற்றம் காணப்படுவதாகவும் சிகிச்சைக்கு ஒத்துழைப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
செப்டம்பர் மாதத்திற்குப் பிறகு மருத்துவமனை தரப்பிலிருந்து தொடர்ந்து அதிகாரப்பூர்வ மருத்துவ அறிக்கைகள் வெளியாகாததால், சமூக வலைதளங்களில் பல்வேறு யூகங்களும் வதந்திகளும் பரவின. சிலர் அவரது உடல்நிலை குறித்துக் கவலை தெரிவித்த நிலையில், குடும்பத்தினர் மற்றும் அரசியல் பிரமுகர்கள் அவ்வப்போது நேரில் சென்று நலம் விசாரித்த தகவல்கள் வெளியாகின. நீண்ட நாட்களாகத் தொடரும் சிகிச்சையால் தொகுதிப் பணிகள் பாதிக்கப்படுவதாகவும், சட்டப்படி வெளியிடக்கூடிய தகவல்களைத் தெளிவுபடுத்த வேண்டும் எனவும் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அண்மையில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
சில நாட்களுக்கு முன்பு பத்திரிகையாளர்களிடம் பேசிய அமைச்சர் மரியவில்சன், 'வி.எஸ்.பாபுவின் உடல்நிலையில் மெதுவான முன்னேற்றமே இருக்கிறது' எனக் கூறியிருந்தார். தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் உயிர் காக்கும் கருவிகளின் உதவியோடு சிகிச்சை பெற்று வந்த வி.எஸ்.பாபுவின் உடல்நிலை கவலைக்கிடமாகி சிகிச்சை பலனளிக்காமல் மதியம் 2:24 மணிக்கு மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்திருப்பதாக மருத்துவமனை இப்போது அறிவித்திருக்கிறது.

அரசியல் பயணம்: திமுக முதல் தவெக வரை
வட சென்னை அரசியலில் பல தசாப்தங்களாக அறியப்பட்ட மூத்த முகமாகத் திகழ்ந்தவர் வி.எஸ். பாபு. புரசைவாக்கம், அயனாவரம், ஜமாலியா, கொளத்தூர் உள்ளிட்ட பகுதிகளின் உள்ளூர் அரசியல் களமும் வாக்காளர்களின் போக்கும் அவருக்கு நன்கு பரிச்சயமானவை. திமுக சார்பில் புரசைவாக்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று, முதன்முறையாகச் சட்டமன்ற உறுப்பினராகப் பதவியேற்றார். மேலும், திமுகவின் வட சென்னை மாவட்டச் செயலாளராகவும் செயல்பட்ட அனுபவம் கொண்டவர். காலப்போக்கில் திமுகவில் ஏற்பட்ட மாற்றங்களுக்குப் பிறகு அங்கிருந்து விலகி, அதிமுகவில் இணைந்து செயல்பட்டார். பின்னர், பிப்ரவரி 7, 2026 அன்று தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்தார்.
2026 தேர்தலில் கொளத்தூரில் படைத்த வரலாற்று வெற்றி
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், கொளத்தூர் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளராக வி.எஸ். பாபு களமிறக்கப்பட்டார். அப்போதைய முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினை எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றி பெற்றதன் மூலம், தமிழ்நாடு அரசியலில் மிகப்பெரிய பேசுபொருளாக மாறினார். 2011-இல் கொளத்தூர் தொகுதி உருவானபோது ஸ்டாலின் வெற்றி பெறக் களப்பணியாற்றியவர், 2026-இல் அதே தொகுதியில் அவரை வீழ்த்தியது அரசியல் பார்வையாளர்களிடையே பெரும் கவனம் பெற்றது.
மே 4, 2026 அன்று எம்.எல்.ஏ.-வாகப் பொறுப்பேற்ற வி.எஸ். பாபு, பதவியேற்ற சில மாதங்களிலேயே உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
முதல்வர் விஜய் இரங்கல்
வி.எஸ்.பாபுவின் உடல்நிலையை விசாரிக்க ஏற்கனவே முதல்வர் விஜய் நேரில் செல்வார் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், வி.எஸ்.பாபுவின் இறப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ள நிலையில் தற்போது முதல்வர் விஜய் MGM மருத்துவமனைக்கு விரைந்துள்ளார். மேலும், 'கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.எஸ்.பாபு அவர்கள் உடல்நலக்குறைவால் மறைந்த செய்தி அறிந்து ஆழ்ந்த வேதனையும், துயரமும் அடைந்தேன்' என்று உருக்கமான இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளார்.






