காட்டுமன்னார்கோவில் அடுத்த கூடுவெளிச்சாவடி பகுதியில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு, அரசு பேருந்து ஒன்று டாணாகார தெரு வழியாக பேருந்து நிலையம் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. இந்தப் பேருந்தை எடையார் கீழத்தெருவைச் சேர்ந்த ஜெயராஜ் (39) என்பவர் ஓட்டி வந்துள்ளார்.
அப்போது, சேத்தியாத்தோப்பு நோக்கிச் சென்ற வேனும், அரசு பேருந்தும் ஒன்றையொன்று கடந்து சென்றபோது லேசாக உரசியதாகக் கூறப்படுகிறது. இதனால் இரு வாகன ஓட்டுநர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
Buy Now ! Pay Daily !
இதில் ஆத்திரமடைந்த மதுபோதையில் இருந்த வேன் ஓட்டுநர், சாலையில் கிடந்த கல்லை எடுத்து அரசு பேருந்தின் கண்ணாடி மீது வீசியுள்ளார். இதில் பேருந்தின் கண்ணாடி உடைந்து சேதமடைந்தது. இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.
இதையடுத்து, பயணிகளைப் பாதுகாப்பாக கீழே இறக்கிவிட்ட பேருந்து ஓட்டுநர், காட்டுமன்னார்கோவில் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்துள்ளார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் ஆய்வாளர் பாபு தலைமையிலான போலீசார், வேன் ஓட்டுநரைப் பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அவர் பெரிய நெல்லிக்கொல்லை தோப்புத் தெருவைச் சேர்ந்த செந்தில்குமாரின் மகன் செல்வகுமார் (34) என்பது தெரியவந்தது. மேலும், வளைகாப்பு நிகழ்ச்சிக்கு வந்த அவர், பயணிகளை இறக்கிவிட்டு மது அருந்தியதாகவும், பின்னர் பெட்ரோல் நிலையத்திற்குச் சென்றபோது பேருந்து ஓட்டுநருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் கண்ணாடியை உடைத்ததாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து போலீசார் செல்வகுமாரை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பட்டப்பகலில் அரசு பேருந்தின் கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






