← முகப்புதஞ்சாவூர் →

தீபாவளி சீட்டு நடத்தி பல லட்சம் மோசடி? வசூல் செய்து குடும்பத்துடன் தலைமறைவு: கண்ணீருடன் போலீசில் புகார்

திருவிடைமருதூர்: கும்பகோணத்தில் தீபாவளி சீட்டு நடத்தி அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் மற்றும் ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் உள்பட 250 பேரிடம் பல லட்சம் ரூபாய் வசூல் செய்து மோசடி நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.

தீபாவளி சீட்டு நடத்தி பல லட்சம் மோசடி? வசூல் செய்து குடும்பத்துடன் தலைமறைவு: கண்ணீருடன் போலீசில் புகார்

பணம் வசூல் செய்த ஓய்வு பெற்ற போக்குவரத்துக் கழக ஊழியர் குடும்பத்துடன் தலைமறைவானதாக கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து திருவிடைமருதூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

20 ஆண்டுகளாக தீபாவளி சீட்டு

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்ற ஒருவர், கடந்த 20 ஆண்டுகளாக தீபாவளி சீட்டு நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் மற்றும் ஓய்வு பெற்ற ஊழியர்கள் உள்ளிட்ட பலரிடம் மாதந்தோறும் குறிப்பிட்ட தொகையை வசூலித்து வந்துள்ளார்.

தீபாவளி பண்டிகையின்போது சீட்டு கட்டியவர்களுக்கு அவர்கள் செலுத்திய தொகையுடன் வெள்ளி நாணயம் மற்றும் பட்டாசுகள் உள்ளிட்ட பரிசுப் பொருட்களையும் வழங்கி வந்ததாக தெரிகிறது. இதனால் அவரிடம் தொடர்ந்து பலர் நம்பிக்கையுடன் தீபாவளி சீட்டு கட்டி வந்துள்ளனர். கடந்த பல ஆண்டுகளாக இந்த சீட்டு திட்டம் நடைபெற்று வந்ததால், அவரை நம்பி ஏராளமானோர் பணம் செலுத்தியதாக கூறப்படுகிறது.

250 பேர் பணம் கட்டியதாக புகார்

இந்த ஆண்டும் வழக்கம்போல் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அவர் சீட்டு வசூல் செய்துள்ளார். அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் மற்றும் ஓய்வு பெற்ற ஊழியர்கள் என சுமார் 250 பேர் அவரிடம் 11 மாதங்களுக்கு மாதந்தோறும் ரூ.2 ஆயிரம் வீதம் பணம் செலுத்தியதாக கூறப்படுகிறது.

இதன்படி ஒவ்வொருவரும் மொத்தம் ரூ.22 ஆயிரம் செலுத்தியுள்ளனர். 250 பேரிடம் வசூலிக்கப்பட்ட தொகை பல லட்சம் ரூபாயை எட்டியதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர். தீபாவளி பண்டிகையின்போது தாங்கள் செலுத்திய சீட்டு பணத்துடன் பரிசுப் பொருட்களும் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் காத்திருந்தனர்.

ஆனால் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை முடிந்தும் சீட்டு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கப்படவில்லை. இதனால் பணம் கட்டியவர்கள் அதிர்ச்சியடைந்தனர். தொடர்ந்து அவரை தொடர்பு கொள்ள முயன்றபோதும் உரிய பதில் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.

குடும்பத்துடன் தலைமறைவு?

இதையடுத்து பணம் கட்டியவர்கள் சம்பந்தப்பட்ட ஓய்வு பெற்ற போக்குவரத்துக் கழக ஊழியரின் வீட்டிற்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது வீடு பூட்டப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. அவர் தனது குடும்பத்துடன் வீட்டை காலி செய்து தலைமறைவானதாகவும் தகவல் தெரியவந்துள்ளது.

20 ஆண்டுகளாக நம்பிக்கையுடன் தீபாவளி சீட்டு நடத்தி வந்தவர், இந்த ஆண்டு பணம் மற்றும் பரிசுப் பொருட்களை வழங்காமல் தலைமறைவானதாக கூறப்படும் சம்பவம், பணம் கட்டிய தொழிலாளர்கள் மற்றும் ஓய்வு பெற்ற ஊழியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போலீசில் புகார்

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் மற்றும் ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் 20-க்கும் மேற்பட்டோர் நேற்று திருவிடைமருதூர் போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் மனு அளித்தனர்.

அந்த மனுவில், தீபாவளி சீட்டு நடத்தி தங்களிடம் பல லட்சம் ரூபாய் வசூல் செய்த நபர், இந்த ஆண்டு பணத்தையும் பரிசுப் பொருட்களையும் வழங்காமல் தலைமறைவாகிவிட்டதாகவும், தாங்கள் செலுத்திய பணத்தை மீட்டுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

புகாரின் அடிப்படையில் தீபாவளி சீட்டு விவகாரத்தில் உண்மையில் மோசடி நடந்துள்ளதா, பணம் வசூல் செய்ததாக கூறப்படும் நபர் எங்கு இருக்கிறார், அவரிடம் எவ்வளவு பணம் வசூலிக்கப்பட்டுள்ளது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கும்பகோணத்தில் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் மற்றும் ஓய்வு பெற்ற தொழிலாளர்களிடம் தீபாவளி சீட்டு நடத்தி பணம் வசூல் செய்துவிட்டு தலைமறைவானதாக கூறப்படும் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !