பணியில் இருக்கும் காலத்தில் ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து குறிப்பிட்ட தொகை வருங்கால வைப்பு நிதி (PF) கணக்கில் சேமிக்கப்படுகிறது. இந்தத் தொகை ஓய்வுக்காலத்தில் நிதிப் பாதுகாப்பை வழங்குவதுடன், அவசரத் தேவைகளுக்கும் பெரிதும் உதவுகிறது. இந்நிலையில், PF உறுப்பினர்களுக்கு கூடுதல் நிதி சுதந்திரம் வழங்கும் வகையில் EPFO பல்வேறு முக்கிய மாற்றங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. குறிப்பாக, ஓய்வுபெறும் ஊழியர்கள் தங்களது PF சேமிப்பை ஒரே தவணையாகப் பெறுவதற்குப் பதிலாக மாதந்தோறும் பெற்றுக்கொள்ளும் புதிய திட்டம் அறிமுகமாக உள்ளது. இதுமட்டுமின்றி, 90% வரை PF பணத்தை எடுக்கும் வசதி மற்றும் பணத்தைப் பெறுவதற்கான காத்திருப்பு காலம் குறைப்பு எனப் பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
PF உறுப்பினர்களுக்கு புதிய Systematic Withdrawal Plan!
Buy Now ! Pay Daily !
EPFO-வின் 240-வது மத்திய அறங்காவலர் குழுக் கூட்டம் (Central Board of Trustees) நவம்பர் 19ஆம் தேதி டெல்லியில் நடைபெற்றது. மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், PF உறுப்பினர்களுக்கான பல்வேறு முக்கிய சீர்திருத்தங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.இதில் முக்கியமானதாக, ஓய்வுபெறும் PF உறுப்பினர்களுக்காக Systematic Withdrawal Plan (SWP) என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
தற்போதைய நடைமுறையில், ஓய்வுபெறும் ஊழியர்கள் தங்களது PF கணக்கில் உள்ள தொகையை மொத்தமாகப் பெற்றுக்கொள்ளும் வசதி உள்ளது. ஆனால், புதிய திட்டத்தின் கீழ் முழுத் தொகையையும் ஒரே நேரத்தில் எடுக்க வேண்டிய அவசியம் இருக்காது.அதற்குப் பதிலாக, தங்களது விருப்பத்திற்கு ஏற்ப மாதந்தோறும், காலாண்டுக்கு ஒருமுறை அல்லது ஆறு மாதங்களுக்கு ஒருமுறை எனத் தவணை முறையில் பணத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.
இதில் முக்கியமான அம்சம் என்னவென்றால், உறுப்பினர்கள் தவணையாகப் பணம் பெறும்போதும், கணக்கில் மீதமுள்ள தொகை தொடர்ந்து EPF திட்டத்தின் கீழ் வருமானத்தை ஈட்டும். இதனால் ஓய்வுக்குப் பிறகும் சேமிப்பை முழுமையாகத் தீர்த்துவிடாமல், படிப்படியாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும். இந்தத் திட்டம் கட்டாயமல்ல. விருப்பமுள்ள உறுப்பினர்கள் மட்டுமே தேர்வு செய்துகொள்ளலாம். ஆரம்பகட்டத்தில் ரூ.5 லட்சத்துக்கும் அதிகமான PF சேமிப்பைக் கொண்ட 55 வயதுக்கு மேற்பட்ட சுமார் 6.32 லட்சம் உறுப்பினர்கள் இதன் மூலம் பயன்பெற வாய்ப்புள்ளதாக EPFO தெரிவித்துள்ளது.
மேலும், தவணை முறையில் பணம் பெற்றுக்கொண்டிருக்கும் உறுப்பினர் உயிரிழந்தால், மீதமுள்ள தொகையை அவரது நாமினி அல்லது சார்ந்திருப்பவர்கள் ஒரே தவணையாகப் பெறலாம் அல்லது தொடர்ந்து தவணை முறையில் பெற்றுக்கொள்ளலாம்.
PF உறுப்பினர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள மற்றொரு முக்கிய மாற்றம், குறைந்தபட்ச இருப்புத் தொகை தொடர்பானது. இதற்கு முன்பு PF கணக்கில் உறுப்பினர்களின் சேமிப்பில் குறைந்தபட்சம் 25% தொகையை இருப்பாக வைத்திருக்க வேண்டும் என்ற விதிமுறை இருந்தது. தற்போது இந்த இருப்புத் தொகையை 25%-லிருந்து 10%-ஆகக் குறைக்க EPFO ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் தகுதியான உறுப்பினர்கள் தங்களது PF சேமிப்பில் 90% வரை பணத்தைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.
உதாரணமாக, ஒருவரின் PF கணக்கில் ரூ.5 லட்சம் சேமிப்பு இருப்பதாக வைத்துக்கொண்டால், புதிய விதிமுறையின்படி குறைந்தபட்சம் ரூ.50,000 இருப்பாக வைத்திருக்க வேண்டும். மீதமுள்ள ரூ.4.50 லட்சம் வரை தகுதி மற்றும் பொருந்தக்கூடிய விதிமுறைகளுக்கு உட்பட்டு பெற முடியும். இந்த மாற்றத்தின் முக்கிய நோக்கம், ஊழியர்கள் தங்களது சொந்த சேமிப்பைப் பயன்படுத்துவதில் அதிக நெகிழ்வுத்தன்மையை வழங்குவதுடன், ஓய்வுக்காலத்திற்கான குறைந்தபட்ச சேமிப்பையும் பாதுகாப்பதாகும்.
PF பணத்தைப் பெற 12 மாதங்கள் காத்திருக்க வேண்டாம்
வேலையை இழந்தவர்கள் அல்லது வேலையை விட்டு வெளியேறியவர்கள் தங்களது PF பணத்தைப் பெறுவதற்கான காத்திருப்பு காலத்திலும் முக்கிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, வேலை இழந்த பிறகு முழுமையான PF தொகையைப் பெறுவதற்கு 12 மாதங்கள் காத்திருக்க வேண்டிய நடைமுறை இருந்தது. தற்போது இந்தக் கால அவகாசத்தை 12 மாதங்களில் இருந்து 2 மாதங்களாகக் குறைக்க EPFO ஒப்புதல் அளித்துள்ளது.
இதனால் வேலையை இழந்தவர்கள் புதிய வேலை கிடைக்கும் வரை காத்திருக்காமல், தகுதியின் அடிப்படையில் இரண்டு மாதங்களுக்குப் பிறகு தங்களது PF தொகையைப் பெறுவதற்கான வாய்ப்பு கிடைக்கும்.குறிப்பாக, வேலையில்லாத காலத்தில் குடும்பச் செலவுகள், குழந்தைகளின் கல்விச் செலவுகள் மற்றும் மருத்துவச் செலவுகளைச் சமாளிக்க வேண்டிய ஊழியர்களுக்கு இந்த மாற்றம் உதவியாக இருக்கும்.
இங்கு கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்த இரண்டு மாத கால வரம்பு PF இறுதித் தொகையைப் பெறுவதற்கான நடைமுறைக்குப் பொருந்தும். EPS ஓய்வூதியப் பலன்களை இறுதியாகப் பெறுவதற்கான காத்திருப்பு காலம் தனியானது; அது 36 மாதங்களாகவே தொடர்கிறது.
புதிய விதிமுறைகள் எப்போது அமலுக்கு வரும்?
EPFO-வின் இந்த அறிவிப்புகள் PF உறுப்பினர்களுக்கு முக்கியமான நிதி சுதந்திரத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், வாரியத்தின் ஒப்புதல் கிடைத்துள்ளதாலேயே அனைத்து மாற்றங்களும் உடனடியாக நடைமுறைக்கு வந்துவிட்டதாகக் கருதக்கூடாது.
குறிப்பாக, Systematic Withdrawal Plan நடைமுறைக்கு வருவதற்கு EPF திட்டத்தில் தேவையான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, மத்திய அமைச்சகத்தின் ஒப்புதலுக்குப் பிறகு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட வேண்டும். எனவே, PF உறுப்பினர்கள் புதிய விதிமுறைகள் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகளைக் கவனித்து வருவது அவசியம். இந்த மாற்றங்கள் நடைமுறைக்கு வரும்போது, ஓய்வுபெறும் ஊழியர்கள் தங்களது சேமிப்பை ஒரே நேரத்தில் பயன்படுத்தாமல், மாதந்தோறும் வருமானம் கிடைக்கும் வகையில் திட்டமிட்டுப் பயன்படுத்திக்கொள்ள முடியும்.






