தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வருவது நகை வாங்கத் திட்டமிட்டுள்ள பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 16 நாட்களில் மட்டும் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.15,360 வரை குறைந்துள்ளது. நவம்பர் மாதம் தொடங்கியதில் இருந்தே தங்கம் விலை தொடர்ந்து இறங்குமுகத்தில் இருந்து வருகிறது. இந்த நிலையில், இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளதால் நகை வாங்கக் காத்திருப்பவர்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.
22 காரட் தங்கம் விலை மேலும் சரிவு
Buy Now ! Pay Daily !
சென்னையில் நேற்று (நவம்பர் 20) ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாகக் குறைந்தது. 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.470 குறைந்து, ஒரு கிராம் ரூ.11,510-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல், சவரனுக்கு ரூ.3,760 குறைந்து, ஒரு சவரன் ரூ.92,080-க்கு விற்பனையானது. ஒரே நாளில் ஏற்பட்ட இந்த மிகப்பெரிய விலை சரிவு நகை வாங்குவோர் மத்தியில் கவனத்தைப் பெற்றது. இதன் தொடர்ச்சியாக, இன்று (நவம்பர் 21) தங்கம் விலை மேலும் குறைந்துள்ளது. 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.45 குறைந்து, ஒரு கிராம் ரூ.11,465-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், சவரனுக்கு ரூ.360 குறைந்து, ஒரு சவரன் ரூ.91,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 16 நாட்களில் ஏற்பட்டுள்ள இந்த விலை வீழ்ச்சி, தங்கம் வாங்குவதற்காகக் காத்திருந்த நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் நகைப் பிரியர்களுக்கு சாதகமான சூழலை உருவாக்கியுள்ளது.
வெள்ளி விலையில் மாற்றமில்லை
தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், வெள்ளியின் விலையில் இன்று எந்த மாற்றமும் ஏற்படவில்லை. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி ரூ.175-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,75,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலையில் ஏற்பட்டுள்ள சரிவுக்கு சர்வதேச சந்தை நிலவரங்களும் அமெரிக்க டாலரின் மதிப்பில் ஏற்பட்டுள்ள உயர்வும் முக்கியக் காரணங்களாகக் கருதப்படுகின்றன. குறிப்பாக, அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதம் தொடர்பான எதிர்பார்ப்புகள் சர்வதேச தங்கச் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. டாலரின் மதிப்பு வலுவடையும் சூழலில், முதலீட்டாளர்கள் தங்கத்தில் மேற்கொண்டுள்ள முதலீடுகளைக் குறைத்து வருவதாகச் சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் தாக்கம் சர்வதேச தங்கத்தின் விலையிலும் எதிரொலித்து வருகிறது.
இருப்பினும், வரும் நாட்களில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் சர்வதேச சந்தை மாற்றங்கள், டாலரின் மதிப்பு மற்றும் முதலீட்டாளர்களின் முடிவுகளைப் பொறுத்து ஏற்ற இறக்கங்களைச் சந்திக்க வாய்ப்புள்ளது.






