உளுந்தூர்பேட்டை அருகே 7 மாதமாக காதலித்த சிறுமியை தவறாக படம் எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்ட இளைஞர் போக்சோவில் கைது!
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் தாலுகா புளியங்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் மாயக்கண்ணன். இவருடைய மகன் ஆதித்யா (21).
Buy Now ! Pay Daily !
கடந்த சில மாதங்களுக்கு முன்பு விபத்தில் காயமடைந்த ஆதித்யா, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அப்போது அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தனது தந்தையை பார்ப்பதற்காக உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி அங்கு வந்துள்ளார்.
அப்போது ஆதித்யாவுக்கும், அந்த சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் கடந்த 7 மாதங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், சிறுமியை தவறாக படம் எடுத்த ஆதித்யா, கடந்த 14-ந் தேதி அந்த வீடியோவை இன்ஸ்டாகிராம் மற்றும் சிறுமியின் தாயாரின் செல்போன் எண்ணுக்கு அனுப்பி, சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர். அந்த மனு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டது.
இதையடுத்து உளுந்தூர்பேட்டை அனைத்து மகளிர் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் சிறுமியின் வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டு சிறுமியின் தாய்க்கு ஆதித்யா அனுப்பியது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து ஆதித்யா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, இளைஞரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.





