தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் ஆதிபட்லாவில் அமைந்துள்ள TCS அலுவலகத்தில் பணியாற்றி வரும் மணீஷ் யாதவ் என்பவர், அய்யப்ப சுவாமிக்கு மாலை அணிந்து விரதம் மேற்கொண்டு வருகிறார். இதற்காக இரண்டு மாதங்களுக்கு முன்பே நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்திருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில், பாரம்பரிய உடையான வேட்டி அணிந்து அலுவலகத்திற்குச் சென்றபோது, நிறுவனத்தின் ஆடைக் கட்டுப்பாட்டு விதிமுறைகளைக் காரணம் காட்டி உள்ளே அனுமதிக்க மறுத்ததாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், மற்ற குழுக்களில் இதேபோன்ற உடையில் ஊழியர்கள் அனுமதிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Buy Now ! Pay Daily !
இந்த விவகாரம் தொடர்பாக அய்யப்ப பக்தர்கள் மற்றும் இந்து அமைப்பினர் TCS அலுவலகம் முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே, இந்தச் சம்பவத்தில் மதரீதியான பின்னணி இல்லை என்றும், பாரம்பரிய வேட்டி அணிவது தொடர்பான புரிதல் இல்லாததால் ஏற்பட்ட பிரச்சினை என்றும் ஆதிபட்லா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இரு தரப்பினரிடமும் இதுவரை முறையான புகார் பெறப்படவில்லை என்றும், பிரச்சினை தற்போது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.
ஏற்கனவே மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் உள்ள TCS நிறுவனத்தில் பெண் ஊழியர்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் மற்றும் மதமாற்றம் தொடர்பான புகார்கள் எழுந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், தற்போது ஹைதராபாத் சம்பவமும் கவனம் பெற்றுள்ளது.
நாசிக் வழக்கில் ஒன்பது FIR-கள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கைச் சுற்றி 'லவ் ஜிஹாத்' உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அரசியல் மற்றும் ஊடக விவாதங்களிலும் இடம்பெற்றன. எனினும், ஒவ்வொரு குற்றச்சாட்டும் விசாரணை மற்றும் நீதிமன்ற ஆதாரங்களின் அடிப்படையிலேயே மதிப்பிடப்பட வேண்டும்.
இரண்டு சம்பவங்களிலும் எழுந்துள்ள கேள்வி ஒன்றுதான்: தனிநபர்களின் மத நம்பிக்கைகள் மற்றும் வழிபாட்டு நடைமுறைகளுக்கும், தனியார் நிறுவனங்களின் பணியிட விதிமுறைகளுக்கும் இடையே எத்தகைய சமநிலை இருக்க வேண்டும்?
இந்த விவகாரத்தில் TCS நிர்வாகத்தின் அதிகாரப்பூர்வ விளக்கம் வெளியாகுமா என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.






