திருவண்ணாமலையில் அமைந்துள்ள அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலானது சிவபெருமானின் பஞ்சபூத ஸ்தலங்களிலே அக்கினி ஸ்தலமாக அமைந்துள்ளது. இத்தலத்திலே கார்த்திகை மாதம் பௌர்ணமியில் நடைபெறும் தீபத்திருவிழா உலகப் பிரசித்தி பெற்றதாகும். இந்நாளிலே பக்தர்கள் கோவிலைச் சுற்றி கிரிவலம் வந்து கார்த்திகை தீபத்தை தரிசனம் செய்வது வழக்கம். அவ்வாறாக இந்த ஆண்டு நவம்பர் 24ம் தேதி, பராபவ வருடம் கார்த்திகை 8ம் நாளில், பௌர்ணமி தினத்தில் திருக்கார்த்திகை தீபம் திருவண்ணாமலையில் ஏற்றப்பட உள்ளது.
ஆண்டுதோறும் திருவண்ணாமலை ஜோதியை காண ஏராளமான பக்தர்கள் வரும் நிலையில் இந்த ஆண்டும் லட்சக்கணக்கான மக்கள் தீப ஜோதியைக் காண வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக பல்வேறு முன்னேற்பாடுகளை செய்து வரும் இந்து சமய அறநிலையத் துறை இந்த ஆண்டு கட்டண தரிசன முறையை முழுவதுமாக ரத்து செய்துள்ளது.
Buy Now ! Pay Daily !
இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பின்படி, பரணி தீபத்தை கோவிலுக்குள் இருந்து தரிசிப்பதற்கான கட்டண அனுமதி முறை இந்த ஆண்டு முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. இணையதளம் வாயிலாக தரிசனத்திற்கு விண்ணப்பிக்கும் பக்தர்களில் 3000 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பரணி தீபம் மற்றும் மகாதீபத்தை கோவிலுக்குள்ளிருந்து காண்பதற்கான இலவச அனுமதி பாஸ் வழங்கப்படும். உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்களுக்கு சமமான தரிசன வாய்ப்பை வழங்கும் வகையில் இந்த 3000 இலவச பாஸ்களில் 1500 பாஸ்கள் உள்ளூர் மக்களுக்கும், 1500 பாஸ்கள் வெளியூர் மக்களுக்கும் வழங்கப்பட உள்ளது. ஆன்லைன் மூலமாக பதிவு செய்யும் பக்தர்கள் தங்கள் ஊர் உள்ளிட்ட விவரங்களோடு தங்களது ஆதார் கார்டு எண் உள்ளிட்டவற்றையும் சேர்க்க வேண்டும்.
இணையதளத்தில் விண்ணப்பிக்கும் பக்தர்களில் இருந்து 3000 ஆயிரம் பேரை தேர்வு செய்யும் முறை நவம்பர் 20ம் தேதி மாலை 4 மணிக்கு கணினி குலுக்கல் முறையில் வெளிப்படையாக நடைபெறும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுமட்டுமல்லாமல் திருவண்ணாமலை கிரிவலம் மற்றும் பரணி தீபத்தை காண வரும் பக்தர்களின் வாகனங்களை நிறுத்துவதற்கான பார்க்கிங் கட்டணம், பொதுக் கழிப்பறை கட்டணம் உள்ளிட்டவற்றை வசூலிக்க திருவண்ணாமலை மாநகராட்சி தடை விதித்துள்ளது.
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் பரணி தீபம் ஏற்றும் நிகழ்வு 24ம் தேதி அதிகாலை 4 மணிக்கும், மகா தீபம் நிகழ்வு மாலை 6 மணிக்கும் நடைபெற உள்ளது. மலை மீது ஏற்றப்படும் மகா தீபம் நிகழ்வை காண செல்லும் பக்தர்கள் மலை மீது ஏறிச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.






