முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்கும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் கந்தசஷ்டி திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான கந்தசஷ்டி திருவிழா கடந்த 10-ஆம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து ஆறு நாட்களாக சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள், தீபாராதனைகள் மற்றும் பல்வேறு வழிபாடுகள் நடைபெற்றன.
சஷ்டி விரதம் மேற்கொள்வதற்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் திருச்செந்தூருக்கு வந்து கோவில் வளாகம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தங்கியிருந்து விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபட்டு வந்தனர்.
Buy Now ! Pay Daily !
திருவிழாவின் ஆறாம், நாளான நேற்று முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நடைபெற்றது. இதையொட்டி ஜெயந்திநாதர் கடற்கரைக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கடற்கரை முழுவதும் பக்தர்கள் கூட்டம் அலைமோதிய நிலையில், மாலை நடைபெற்ற சூரசம்ஹார நிகழ்வைக் காண லட்சக்கணக்கானோர் திரண்டிருந்தனர்.

சூரசம்ஹார நிகழ்வில் முதலில் யானை முகம் கொண்ட தாரகாசுரனையும், தொடர்ந்து சிங்கமுக சூரனையும் முருகப்பெருமான் தனது வேலால் வதம் செய்யும் நிகழ்வுகள் நடைபெற்றன. இதன் தொடர்ச்சியாக இறுதியாக சூரபத்மனுடன் முருகப்பெருமான் போரிடும் நிகழ்வு நடைபெற்றது. அப்போது சூரபத்மன் மாமரமாக உருவெடுக்க, முருகப்பெருமான் தனது வேலால் மாமரத்தை இரண்டாகப் பிளந்து அவனை வதம் செய்தார்.
தொடர்ந்து சூரபத்மனின் இரு பகுதிகளும் மயிலாகவும் சேவலாகவும் மாறியதாக ஐதீகத்தின் அடிப்படையில் நிகழ்வு நடைபெற்றது. மயிலைத் தனது வாகனமாகவும், சேவலைத் தனது கொடியாகவும் ஏற்றுக்கொண்ட முருகப்பெருமானை தரிசித்த பக்தர்கள் விண்ணதிர அரோகரா கோஷம் எழுப்பி பக்திப் பரவசத்துடன் வழிபட்டனர்.
அதாவது, கந்தபுராணத்தின்படி, சூரபத்மன் என்ற அசுரன் கடுமையான தவம் செய்து பல்வேறு வரங்களைப் பெற்று தேவர்களையும் மக்களையும் துன்புறுத்தி வந்தான். அவனது கொடுமைகளிலிருந்து தேவர்களைக் காப்பாற்றுவதற்காக சிவபெருமானின் நெற்றிக்கண்ணிலிருந்து தோன்றிய ஆறு தீப்பொறிகள் சரவணப்பொய்கையில் ஆறு குழந்தைகளாக உருவெடுத்தன. கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்ட அந்த ஆறு குழந்தைகளையும் பார்வதி தேவி ஒன்றிணைத்து ஆறுமுகப் பெருமானாக உருவாக்கினார்.

இதையடுத்து தேவர்களின் படைக்குத் தலைமை ஏற்ற முருகப்பெருமான் சூரபத்மனுக்கு எதிராக ஆறு நாட்கள் போரிட்டு, ஆறாம் நாளில் அவனை வதம் செய்ததாக புராணங்கள் தெரிவிக்கின்றன. தீமையை அழித்து நன்மையை நிலைநாட்டிய இந்த வெற்றியின் அடையாளமாகவே ஆண்டுதோறும் கந்தசஷ்டி திருவிழாவில் சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.
இந்த நிகழ்ச்சியைக் காண லட்சகணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பக்தர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம், காவல்துறை மற்றும் கோவில் நிர்வாகம் சார்பில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் தலைமையில், ஐந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களின் மேற்பார்வையில் மொத்தம் 4,100 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதில் 16 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், 49 உதவி காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் துணைக் காவல் கண்காணிப்பாளர்கள், 139 காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகளும் இடம்பெற்றிருந்தனர்.
கோவில் வளாகம் மற்றும் கடற்கரைப் பகுதிகளில் 30 கண்காணிப்பு கோபுரங்கள், 105 தற்காலிக சிசிடிவி கேமராக்கள், 46 ஒலிபெருக்கிகள் மற்றும் 1,000 பேரிகார்டுகள் அமைக்கப்பட்டிருந்தன. மேலும், 4 ட்ரோன் கேமராக்கள் மூலம் வான்வழியாகவும் பக்தர்கள் கூட்டம் மற்றும் மக்கள் நடமாட்டம் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டது.

பக்தர்கள் சூரசம்ஹார நிகழ்ச்சியை எளிதாகக் காணும் வகையில் கடற்கரை மற்றும் முக்கியப் பகுதிகளில் 26 இடங்களில் எல்.இ.டி. திரைகள் அமைக்கப்பட்டிருந்தன. பக்தர்களின் வசதிக்காக 11 இடங்களில் நிழற்கொட்டகைகள், கூடுதலாக 300 தற்காலிகக் கழிப்பறைகள், 10-க்கும் மேற்பட்ட இடங்களில் குடிநீர் பந்தல்கள் அமைக்கப்பட்டிருந்தன. போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க 12 இடங்களில் தற்காலிகப் பேருந்து நிறுத்தங்களும், சுமார் 10 ஆயிரம் வாகனங்களை நிறுத்தும் வகையில் வாகன நிறுத்துமிடங்களும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
மருத்துவ முகாம்கள், ஆம்புலன்ஸ் வாகனங்கள், தீயணைப்பு வாகனங்கள் மற்றும் அவசரகால மீட்புக் குழுவினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர். செல்போன் நெட்வொர்க் பாதிப்பைத் தவிர்க்க பி.எஸ்.என்.எல். நிறுவனம் சார்பில் இரண்டு கூடுதல் தொலைத்தொடர்பு கோபுரங்களும் அமைக்கப்பட்டிருந்தன.
சூரசம்ஹாரம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து இன்று இரவு முருகப்பெருமான் குமரவிடங்கப் பெருமானாகவும், தெய்வானை அம்பாளுடனும் திருக்கல்யாண வைபவத்தில் எழுந்தருள உள்ளார். இதையொட்டி திருச்செந்தூரில் தொடர்ந்து பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது.
கடல் அலைக்கு இணையாக அலைமோதிய பக்தர்கள் கூட்டமானது செந்திலாண்டவர் வேல் ஏந்தி சூரனை வதம் செய்தபோது அரோகரா கோஷம் விண்ணை அதிரவைத்தது...






