← முகப்புதஞ்சாவூர் →

வேலால் சூரனை வதம் செய்த வடிவேலன்! தஞ்சை பூக்காரத்தெரு சுப்பிரமணியசாமி கோவிலில் சூரசம்ஹாரப் பெருவிழா!

தஞ்சாவூர்: ஆன்மீக மணம் கமழும் தஞ்சை மாநகரின் பூக்காரத்தெரு, பூச்சந்தை அருகே அமைந்துள்ள பழமை வாய்ந்த அருள்மிகு சுப்பிரமணியசாமி திருக்கோவிலில் கந்தசஷ்டிப் பெருவிழாவை முன்னிட்டு, தீமைகளை அழித்து நன்மைகளை நிலைநாட்டும் சூரசம்ஹார நிகழ்வு நேற்று இரவு மிகவும் கோலாகலமாகவும், பக்திப் பரவசத்துடனும் நடைபெற்றது.

வேலால் சூரனை வதம் செய்த வடிவேலன்! தஞ்சை பூக்காரத்தெரு சுப்பிரமணியசாமி கோவிலில் சூரசம்ஹாரப் பெருவிழா!

கந்தசஷ்டி விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரத்தை முன்னிட்டு, நேற்று மாலை உற்சவர் சுப்பிரமணியசாமிக்குச் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து, கண்கவர் மலர் அலங்காரத்தில் ஆட்டுக்கிடாய் வாகனத்தில் எழுந்தருளிய முருகப்பெருமான், மேளதாளங்கள் முழங்கத் திருக்கோவிலில் இருந்து புறப்பட்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தார்.

பக்தர்கள் மத்தியில் தத்ரூபமாக நடந்த சூரசம்ஹாரம்

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

வீதி உலாவைத் தொடர்ந்து, மேரீஸ் கார்னர் பகுதியில் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மத்தியில் சுப்பிரமணியசாமி எழுந்தருளினார். அப்போது, எதிர் திசையில் சூரபத்மன் சிங்கமுகாசுரன், தாரகாசுரன் உள்ளிட்ட பல்வேறு மாய உருவங்களில் வந்து முருகப்பெருமானுடன் போரிடும் காட்சிகள் மிகவும் தத்ரூபமாக நிகழ்த்திக் காட்டப்பட்டன. இதனைக் கண்ட பக்தர்கள் மெய்சிலிர்த்துப் போயினர்.

விண்ணை முட்டிய 'அரோகரா' கோஷம்

போரின் இறுதியாக, அன்னை பராசக்தியிடம் பெற்ற சக்திவேலால் சூரபத்மனை முருகப்பெருமான் வதம் செய்து ஆட்கொண்டார். அந்தப் புனிதத் தருணத்தில், அங்குக் கூடியிருந்த பக்தர்கள் வெள்ளம் "வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா... வீரவேல் முருகனுக்கு அரோகரா..." என விண்ணை முட்டும் அளவிற்குப் பக்தி முழக்கங்களை எழுப்பி வழிபட்டனர். சூரனை வதம் செய்த பின்னர், வெற்றித் திருக்கோலத்தில் காட்சியளித்த சுப்பிரமணியசாமிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

விழாவிற்கு வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் சாம்பார் சாதம், தயிர் சாதம் உள்ளிட்ட அறுசுவை அன்னதானம் சிறப்பாக வழங்கப்பட்டது. நிகழ்ச்சி முடிந்ததும் முருகப்பெருமான் மீண்டும் திருக்கோவிலைச் சென்றடைந்தார்.

இன்றும், நாளையும் நடக்க உள்ள நிகழ்வுகள்

இன்று (திங்கட்கிழமை): சூரசம்ஹாரத்தைத் தொடர்ந்து, கோவிலில் தெய்வானை அம்மனுடன் சுப்பிரமணியசுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.

நாளை (செவ்வாய்க்கிழமை): சுவாமி குதிரை வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார்.

நவம்பர் 20: கந்தசஷ்டி விழாவின் நிறைவாக விடையாற்றி உற்சவம் நடைபெற உள்ளது.

இவ்விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் உபயதாரர்களுடன் இணைந்து இந்து சமய அறநிலையத் துறையினர் மிகச் சிறப்பாகச் செய்து வருகின்றனர்.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !