ஆண்டுதோறும் சபரிமலை சுவாமி ஐயப்பன் திருக்கோவிலில் கார்த்திகை மாதத்தில் நடைபெறும் மண்டல, மகர விளக்கு பூஜை மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த நாளிலே பக்தர்கள் ஐயப்பனை வேண்டி மாலை அணிந்து விரதமிருந்து சபரிமலைக்கு யாத்திரை செல்வது வழக்கம்.
இன்று கார்த்திகை 1 தொடங்கியுள்ள நிலையில் தமிழகம், கேரளா, ஆந்திரா என தென் மாநிலங்கள் பலவற்றிலும் ஐயப்ப சுவாமியை வேண்டி பக்தர்கள் மாலை அணிந்து வருகின்றனர். இன்று தொடங்கி ஒரு மண்டலம் விரதமிருந்து ஐயப்ப சுவாமியை தரிசனம் செய்ய உள்ளனர். மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்கான ஏற்பாடுகள் சபரிமலையில் பரபரப்பாக நடந்து வருகிறது. நேற்று மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு சீசனுக்காக சபரிமலை ஐயப்ப சுவாமி கோயில் காலை 5 மணிக்கு திறக்கப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர் இருமுடி கட்டி வந்த ஐயப்ப பக்தர்கள் 18 படிகளில் ஏறிச் சென்று ஐயப்ப சுவாமியை தரிசனம் செய்தனர். தொடக்க நாள் என்பதால் தரிசனத்திற்காக 30 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இன்னும் சில நாட்களில் பக்தர்கள் வருகை அதிகரிக்கும் என்பதால் ஆன்லைன் முன்பதிவு உள்ளிட்ட வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
Buy Now ! Pay Daily !
இன்று கார்த்திகை மாத தொடக்க நாள் என்பதால் அதிகாலை 3 மணிக்கே சன்னதி திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. மேலும் இன்று முதல் மகரவிளக்கு சீசன் முடியும் வரை பக்தர்கள் நெரிசலில் தரிசனத்திற்கு காத்திருக்கும் பிரச்சினையை தவிர்க்க தினசரி 18 மணி நேரம் சுவாமி நடை திறந்திருக்கும் என தேவசம்போர்டு அறிவித்துள்ளது. இதனால் ஐயப்ப பக்தர்கள் தங்கு தடையின்று ஐயப்ப தரிசனம் பெற முடியும்.
மேலும் ஆன்லைன் முன்பதிவு மூலம் ஒரு நாளைக்கு 66 ஆயிரம் பேரும், உடனடி முன்பதிவு மூலம் ஒரு நாளைக்கு 14 ஆயிரம் பேரும் என மொத்தமாக ஒரு நாளைக்கு 80 ஆயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். இதற்கான ஆன்லைன் முன்பதிவுகள் கடந்த மாதம் 29ம் தேதி தொடங்கி நடந்து வருகின்றன.
சபரிமலை சுவாமி ஐயப்பன் கோயிலின் முக்கிய நிகழ்வான மண்டல பூஜை அடுத்த மாதம் டிசம்பர் 27ம் தேதியும், மகரவிளக்கு பூஜை 2027 ஜனவரி மாதம் 14ம் தேதியும் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.






