வல்லக்குளம் பள்ளிவாசல் கிழக்குத் தெருவைச் சேர்ந்த மகசூர் அலி என்பவரின் 4 வயது மகள் மைசா ரசூல். சிக்கலில் உள்ள தனியார் பள்ளியில் எல்.கே.ஜி படித்து வந்த இந்த குழந்தைக்கு கடந்த 10 நாட்களுக்கு முன்பு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. உள்ளூரில் அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காத நிலையில், மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி முன்தினம் இரவு பரிதாபமாக உயிரிழந்தார். மலரப் போகும் முன்பே ஒரு பிஞ்சு உயிர் டெங்குவுக்கு பலியான சம்பவம் ஒட்டுமொத்த கிராமத்தையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
"எங்கள் குழந்தைக்கு நேர்ந்த இந்த கதி, இனி வேறு எந்த குழந்தைக்கும் நேரக்கூடாது" என கதறும் உறவினர்களின் கண்ணீருக்கு முழுமுதல் காரணம் அதிகாரிகளின் நிர்வாகச் சீர்கேடுதான். வல்லக்குளம் கிராமத்திற்கு குடிநீர் விநியோகம் செய்யும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி பல மாதங்களாக சுத்தம் செய்யப்படாமல் அசுத்தத்தின் உச்சமாக காட்சியளிக்கிறது. தெருக்களில் சாக்கடை நீர் பல நாட்களாக தேங்கி நிற்கிறது; குப்பைகள் அள்ளப்படாமல் மலை போல் கிடக்கின்றன.
Buy Now ! Pay Daily !
கொசுக்கள் உற்பத்தியாகும் இடமாக கிராமம் மாறியிருப்பது குறித்து பலமுறை புகார் அளித்தும், ஊராட்சி நிர்வாகம் மெத்தனத்தில் இருந்துள்ளது. மக்களின் அடிப்படைத் தேவையான சுகாதாரத்தை உறுதி செய்ய வேண்டிய உள்ளாட்சி நிர்வாகமும், நோய் தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய சுகாதாரத்துறையும் தங்கள் பொறுப்பைத் தட்டிக்கழித்ததே இந்த பச்சிளம் குழந்தையின் மரணத்திற்கு காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
குழந்தையின் மரணத்திற்குப் பிறகு, தற்போது கண்துடைப்புக்காக சில அதிகாரிகள் கிராமத்தை எட்டிப் பார்ப்பதை மக்கள் மிகக் கடுமையாக சாடியுள்ளனர். "முன்கூட்டியே விழித்துக்கொண்டு சுகாதார மேம்பாட்டுப் பணிகளைச் செய்திருந்தால், இன்று எங்கள் குழந்தை எங்களோடு இருந்திருப்பாளே" என்ற மக்களின் நியாயமான ஆதங்கத்திற்கு அலட்சியம் காட்டும் அதிகார வர்க்கம் என்ன பதில் சொல்லப் போகிறது?
தற்போது வல்லக்குளம் பகுதியில் மேலும் சில குழந்தைகளும், மாணவர்களும் டெங்கு பாதிப்பாலும், மர்மக் காய்ச்சலால் அவதிப்பட்டும் வருகின்றனர். இனியும் தாமதிக்காமல், அரசு நிர்வாகம் கீழ்க்கண்ட நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் எடுக்க வேண்டும் என மக்கள் எச்சரிக்கின்றனர்: சுகாதாரத் துறையும் ஊராட்சி நிர்வாகமும் இணைந்து உடனடியாக கிராமம் முழுவதும் சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்த வேண்டும். பல மாதங்களாக அசுத்தமாக கிடக்கும் குடிநீர் தொட்டிகளை உடனடியாக சுத்தம் செய்து, பாதுகாப்பான குடிநீர் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். தேங்கியுள்ள சாக்கடைகள் மற்றும் குப்பைகளை அகற்றி, கொசு ஒழிப்பு மற்றும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்.
மற்றொரு உயிர் பறிபோகும் வரை காத்திருக்காமல், அலட்சியத்தை மூட்டை கட்டிவிட்டு அதிகாரிகள் உடனடியாக களமிறங்க வேண்டும். இனிமேல் இதுபோன்ற ஒரு மரணம் நிகழ்ந்தால், அது நிர்வாகத்தின் மீதான கொலைக்குற்றமாகவே பார்க்கப்படும் என்பதே வல்லக்குளம் கிராம மக்களின் ஒட்டுமொத்த எச்சரிக்கையாக இருக்கிறது.






