← முகப்புகரூர் →

கரூரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பிணமாக மீட்பு போலீஸ் விசாரணை

கரூர் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தம்பதி, அவர்களது மகள் மற்றும் இரண்டு குழந்தைகள் என மொத்தம் 5 பேர் தோட்டத்துக் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கிணற்றில் பிணமாக மீட்கபட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர்

கரூர் மாவட்டம், சின்ன காளிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி (63). இவரது மனைவி ஜானகி (60). இவர்களது மகள் சுகுணா (35), வேலாயுதம்பாளையத்தைச் சேர்ந்த பிரபு என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். இந்தத் தம்பதிக்கு சிவானி (10), ஆதிரன் (4) என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில், சுகுணாவுக்கும் அவரது கணவர் பிரபுவுக்கும் இடையே குடும்பப் பிரச்சினை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே, நேற்று (நவம்பர் 18) இரவு சின்ன காளிபாளையம் பகுதியில் ராமசாமிக்குச் சொந்தமான தோட்டத்தில் உள்ள கிணற்றில், ராமசாமி, ஜானகி, சுகுணா மற்றும் அவர்களது இரண்டு குழந்தைகள் என ஐந்து பேரும் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளனர்.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

இதனைப் பார்த்த அருகிலுள்ள தோட்டத்தைச் சேர்ந்த கருப்பண்ணன் என்பவர் உடனடியாக வாங்கல் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரகுபதி தலைமையிலான போலீசார், தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் ஐந்து பேரின் உடல்களையும் மீட்டனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், ஐந்து பேரும் ஒருவரையொருவர் துணியால் கட்டிக்கொண்டு கிணற்றில் குதித்து உயிரை மாய்த்துக்கொண்டதாகத் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக உயிரிழந்த ராமசாமியின் மகன் கண்ணன் அளித்த புகாரின் பேரில் வாங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், ராமசாமி தனது கைப்பட எழுதிய கடிதம் ஒன்றும் போலீசாருக்குக் கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதில், இந்த முடிவுக்கு தாங்கள் மட்டுமே காரணம் என்றும், வேறு யாருக்கும் இதில் தொடர்பில்லை என்றும், அனைவரும் ஒன்றாகச் சேர்ந்தே இந்த முடிவை எடுத்ததாகவும் உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையே, உயிரிழந்த ஐந்து பேரின் உடல்களும் கரூர் காந்திகிராமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டு, இன்று பிரேதப் பரிசோதனை மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு குழந்தைகள் உட்பட ஐந்து பேர் உயிரிழந்த இந்தச் சம்பவம் கரூர் மாவட்டம் முழுவதும் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !