← முகப்புவிழுப்புரம் →

இடைத்தேர்தல் தேவையற்றது; வேல்முருகன் கொடுத்த புது யோசனை!

தமிழகத்தில் இடைத்தேர்தல் நடத்துவது தேவையற்றது என்றும், தேர்தலில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர் உயிரிழந்தாலோ அல்லது பதவியை இழந்தாலோ, இரண்டாவது இடத்தைப் பிடித்த வேட்பாளரை சட்டமன்ற உறுப்பினராக அறிவிக்க வேண்டும் என்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

இடைத்தேர்தல் தேவையற்றது; வேல்முருகன் கொடுத்த புது யோசனை!

விழுப்புரத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தொண்டரின் திருமண விழாவில் பங்கேற்பதற்காகத் தனியார் திருமண மண்டபத்திற்கு வந்த வேல்முருகன், மணமக்களை வாழ்த்திய பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.அப்போது தமிழகத்தில் விஜய் தலைமையிலான ஆட்சி பொறுப்பேற்று ஆறு மாதங்களைக் கடந்துள்ள நிலையில், சட்டம் ஒழுங்கு நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதாகக் குற்றம்சாட்டினார்.

கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும், செஞ்சியில் காணாமல் போன சிறுமி இதுவரை கண்டுபிடிக்கப்படாதது வேதனையளிப்பதாகவும் குறிப்பிட்டார். போதைப்பொருள் கடத்தல் சம்பவங்கள் தமிழகத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்தார்.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

மாவட்ட ஆட்சியருக்கு சட்டமன்ற உறுப்பினர் குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரத்தில் முதலமைச்சர் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறிய அவர், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் ஆளுங்கட்சியினரின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்த முடியாத நிலையில் முதலமைச்சர் இருப்பதாக விமர்சித்தார்.

மேலும், தமிழக அரசின் ஆறு மாத கால ஆட்சிச் சாதனைகளைப் பட்டியலிட்டு முதலமைச்சர் செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்றும், நிர்வாகத்தை வழிநடத்த முடியவில்லை என்றால் தார்மீகப் பொறுப்பேற்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

திருப்பரங்குன்றம் தீபம் விவகாரத்தில் மதநல்லிணக்கத்தையும் சமூக ஒற்றுமையையும் பாதுகாக்க முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். காவிரி விவகாரத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் பிரதமரைச் சந்தித்து தமிழகத்தின் உரிமையை வலியுறுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

தமிழகத்தின் முக்கிய நிர்வாகப் பொறுப்புகளில் தமிழர்கள் அல்லாதவர்கள் அதிகளவில் இருப்பது கவலைக்குரியது என்று குறிப்பிட்ட வேல்முருகன், காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு உள்ளிட்ட நதிநீர் உரிமைப் பிரச்சினைகள், தொழில் நிறுவனங்கள் அண்டை மாநிலங்களுக்குச் செல்வது, வேலைவாய்ப்பின்மை, போக்குவரத்துக் கழக ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியதாரர்களின் கோரிக்கைகள் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு அரசு தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தினார்.

தொடர்ந்து பேசிய அவர், தமிழக வெற்றிக் கழகத்தை வைகோ ஆதரித்த பிறகு அவரது பேச்சுகளும் செயல்பாடுகளும் தமிழக மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாகவும் விமர்சித்தார்.

மேலும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகே தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிலைப்பாடு அறிவிக்கப்படும் என்று தெரிவித்த அவர், இடைத்தேர்தல் நடத்துவது தேவையற்றது என்றும், வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர் உயிரிழந்தாலோ அல்லது பதவியை இழந்தாலோ இரண்டாவது இடத்தைப் பிடித்த வேட்பாளரை சட்டமன்ற உறுப்பினராக அறிவிக்க வேண்டும் என்றும் தனது கருத்தை முன்வைத்தார்.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !