← முகப்புதிருப்பூர் →

திருப்பூரில் பல லட்சம் அபேஸ்: கலெக்டர் ஆபீஸில் கண்ணீருடன் குவிந்த பெண்கள்!

திருப்பூரில் தீபாவளி சீட்டு நடத்தி ரூ.70 லட்சத்திற்கும் மேல் மோசடி செய்ததாகக் கூறப்படும் நபர் மீது நடவடிக்கை எடுத்து, தங்களது பணத்தை மீட்டுத் தரக்கோரி பாதிக்கப்பட்ட பெண்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திரண்டு மனு அளித்தனர்.

திருப்பூரில் பல லட்சம் அபேஸ்: கலெக்டர் ஆபீஸில் கண்ணீருடன் குவிந்த பெண்கள்!

திருப்பூர் கொங்கு மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்த ரமேஷ்குமார் என்பவர், கடந்த 10 ஆண்டுகளாக ‘கைராசி சிட்ஸ்’ என்ற பெயரில் தீபாவளி சீட்டு நடத்தி வந்துள்ளார். பனியன் நிறுவனத் தொழிலாளர்கள் மற்றும் இல்லத்தரசிகள் என 700-க்கும் மேற்பட்டோர் வாரந்தோறும் ரூ.100 மற்றும் ரூ.200 வீதம் அவரிடம் சீட்டு கட்டி வந்துள்ளனர்.

கடந்த ஆண்டுகளில் முறையாகப் பணத்தைத் திருப்பிக் கொடுத்ததால், இந்த ஆண்டும் பலர் நம்பிக்கையுடன் பணம் செலுத்தியுள்ளனர்.தீபாவளி பண்டிகையின்போது பணத்தைப் பெற்றுக்கொள்ளலாம் என எதிர்பார்த்திருந்த நிலையில், பண்டிகை முடிந்தும் ரமேஷ்குமார் பணத்தைத் திருப்பிக் கொடுக்காமல் தொடர்ந்து இழுத்தடித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

இதனால் சுமார் ரூ.70 லட்சத்திற்கும் மேல் மோசடி நடந்துள்ளதாகப் பாதிக்கப்பட்டவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்கள் கூறுகையில், “பனியன் நிறுவனங்களில் வேலை பார்ப்பதால் எங்களுக்குப் போனஸ் கிடையாது. தீபாவளிச் செலவுக்காக வீட்டுக்குத் தெரியாமல் சிறுகச் சிறுகச் சேமித்துப் பணம் கட்டினோம்.

தற்போது பணத்தைக் கேட்டால் தர மறுக்கிறார். அவரது வீடு மற்றும் கடைக்குச் சென்று கேட்டபோது, கேமரா மற்றும் வாகனத்தை உடைத்துவிட்டதாகப் பொய்ப் புகார் அளிப்பதாக மிரட்டுகிறார். புகார் கொடுத்தால் நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்றுவிடுவேன் என்றும் கூறுகிறார்” எனத் தெரிவித்தனர்.

மேலும், தீபாவளிச் செலவுக்காக வாங்கிய கடனைக் கூட திருப்பிச் செலுத்த முடியாமல் தவித்து வருவதாக அவர்கள் வேதனை தெரிவித்தனர். இதையடுத்து, 70-க்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்டவர்கள் ஒன்றுதிரண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

சம்பந்தப்பட்ட நபர் மீது உரிய நடவடிக்கை எடுத்து, தாங்கள் இழந்த பணத்தை விரைவாக மீட்டுத் தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !