← முகப்புதிருப்பூர் →

திருப்பூரில் பெண் அடித்துக் கொலை - போதைக் கணவரின் வெறிச்செயல்!

திருப்பூரில் குடும்ப தகராறில் இரும்பு கம்பியால் மனைவியை அடித்துக் கொலை செய்த கணவன். திருப்பூர் தெற்கு போலீசார் விசாரணை.

திருப்பூரில் பெண் அடித்துக் கொலை - போதைக் கணவரின் வெறிச்செயல்!

கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் காளையன் என்கிற பாலசுப்ரமணியம் (45), இவரது மனைவி மலர் (40) இவர்களுக்கு இரண்டு மகள்கள் ஒரு மகன் உள்ளனர். திருப்பூர் தட்டான் தோட்டம் முதல் வீதி பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக குடியிருந்து வருகின்றனர். பாலசுப்பிரமணியம் திருப்பூர் பூ மார்க்கெட்டில் லோடுமேன் ஆக வேலை செய்து வருகிறார். இவருக்கு குடிப்பழக்கமும், கஞ்சா போன்ற போதை பொருள் பயன்படுத்தும் பழக்கமும் இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக கணவன் மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு ஏற்பட்ட தகராறு காரணமாக பாலசுப்ரமணியத்தின் மனைவி மலர் கணவரிடம் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு, உறவினர்கள் வீட்டுக்கு சென்று விட்டார். இதன் பின்னர் தான் திருந்தி விட்டதாகவும் இனிமேல் போதைப் பொருள் மற்றும் குடியை தொடுவதில்லை என சமாதானம் செய்து மனைவியை அழைத்து வந்து மீண்டும் குடும்பம் நடத்தியுள்ளார். இருந்த போதிலும் மீண்டும் கடந்த சில மாதங்களாக குடி மற்றும் போதைக்கு பாலசுப்ரமணியம் அடிமையாகி உள்ளார். இதனால் கணவன் மனைவியிடையே மீண்டும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் இன்று மதியம் வேலை முடிந்து குடிபோதையில் வந்த பாலசுப்பிரமணியம் மனைவி மலருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். அதுமட்டுமின்றி மனைவியின் அம்மாவுடன் சண்டையிட்டு அவரை வீட்டை விட்டு வெளியே துரத்தியுள்ளார். இதன் காரணமாக கணவன் மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த பாலசுப்பிரமணியம் வீட்டில் இருந்த இரும்பு கம்பியை எடுத்து தனது மனைவி மலரின் தலையில் ஓங்கி அடித்துள்ளார். இதில் நிலைகுலைந்து கீழே சரிந்த மலர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதை பார்த்து அதிர்ச்சியான பாலசுப்ரமணியம் உடனடியாக அங்கிருந்து தப்பி தலைமறைவானார். இந்த சம்பவம் குறித்து அக்கம் பக்கத்தினர் திருப்பூர் தெற்கு போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உயிரிழந்த மலரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவ இடத்திற்கு வந்த, திருப்பூர் மாநகர தெற்கு காவல் துறை ஆணையர் ஆகாஷ் ஜோஷி தடயங்களை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டார். இது தொடர்பாக திருப்பூர் தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான பாலசுப்ரமணியத்தை தேடி வருகின்றனர். குடிபோதையில் கணவன் மனைவியை இரும்பு கம்பியால் அடித்துக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !