கோவை ரத்தினபுரியைச் சேர்ந்தவர் கீதா (40). இவரது கணவர் இறந்துவிட்ட நிலையில், கோவையைச் சேர்ந்த மெக்கானிக் கதிரவன் (38) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, இருவரும் கணவன், மனைவிபோல் வாழ்ந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கதிரவன் தாக்குவதாக கீதா போலீசில் புகார் அளிப்பதும், போலீசார் விசாரணை நடத்துவதும் தொடர்கதையாக இருந்துள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறில் கீதா அளித்த புகாரின் பேரில் கதிரவன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் கீதாவே அவரை ஜாமீனில் வெளியே எடுத்துள்ளார். இதற்கிடையே கீதாவின் நகைகளை கதிரவன் விற்றதாகவும், பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாகவும் இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் நகை, பணத்தைத் திருப்பிக் கேட்டு கீதா தொடர்ந்து தொந்தரவு செய்ததாகக் கூறப்படுகிறது.
Buy Now ! Pay Daily !
இதனால் ஆத்திரமடைந்த கதிரவன், கீதாவை திருப்பூர் மாவட்டம் குடிமங்கலம் அருகே உள்ள பி.ஏ.பி. வாய்க்கால் பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்ட நிலையில், தண்ணீர் அதிகமாகச் சென்றுகொண்டிருந்த வாய்க்காலில் கீதாவைத் திடீரென தள்ளிவிட்டதாகக் கூறப்படுகிறது.
பின்னர் கீதா தவறி வாய்க்காலில் விழுந்துவிட்டதாக 108 ஆம்புலன்ஸுக்குத் தகவல் தெரிவித்தார். அங்கு வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் கீதாவை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் கீதாவைக் கொலை செய்துவிட்டு கதிரவன் நாடகமாடியது தெரியவந்தது. இதையடுத்து, குடிமங்கலம் போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்து கதிரவனைக் கைது செய்தனர்.


