தமிழகத்தில் திராவிட கட்சிகளின் ஆதிக்கத்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என பாஜக போன்ற தேசிய கட்சிகளும் சரி, நாதக போன்ற தமிழ் தேசியக் கட்சிகளும் சரி, தொடர்ந்து தங்கள் அரசியல் மேடைகளில் முழங்கி வந்தன. இதற்கிடையே கட்சித் தொடங்கி தேர்தலில் களம் கண்ட நடிகர் விஜய்யின் செயல்பாடு, அப்போது ஆண்ட திமுக உள்ளிட்ட கட்சிகளுக்கே பெரும் அச்சுறுத்தலாக தெரியவில்லை. நடிகரை பார்க்க வரும் கூட்டம் ஓட்டாக மாறாது என்ற அரசியல் பிரமுகர்களின் கூற்றை உடைத்து, கட்சித் தொடங்கிய 2 ஆண்டுகளிலேயே ஆட்சியை பிடித்து மற்ற கட்சிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளது தமிழக வெற்றிக் கழகம்.
தேர்தலில் வென்றதோடு மட்டுமல்லாமல் அரசியல் நடைமுறைகளில் புதிய மாற்றங்களை ஏற்படுத்தினார் விஜய். அதுதான் ஆட்சியில் பங்கு. உறுதியளித்தப்படியே கூட்டணி கட்சிகளுக்கு அமைச்சர் பதவிகளையும் வழங்கியது தவெக. இது பல காலமாக பெரிய கட்சிகளோடு கூட்டணியில் இருந்து ஒவ்வொரு தேர்தலுக்கு அதிக சீட்டுகள் கேட்டு மன்றாடும் சிறு கட்சிகளுக்கு தவெக மீது ஒரு ஈர்ப்பை உருவாக்கியுள்ளதாக தெரிகிறது.
Reach our readers. Contact us to advertise in this space.
புதிதாக ஆட்சிக்கு வந்துள்ள கட்சி, நடைமுறை நிலவரங்களை கணக்கில் எடுத்து சரியாக செயல்படுமா என்ற கேள்வி அனைவருக்கும் இருந்து வந்த நிலையில் பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், 200 யூனிட் இலவச மின்சாரம், தாய் மாமன் தங்க மோதிர திட்டம், காலை உணவுத்திட்ட விரிவாக்கம் என அறிவித்த வாக்குறுதிகளை கொஞ்சம் கொஞ்சமாக தவெக அரசு செயல்படுத்தி வருகிறது. ஆனால் அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்ற அரசு கஜானாவை நிரப்ப தவெக அரசு சரியான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. சமீபத்தில் பரந்தூர் விமான நிலைய திட்டத்தை தமிழக அரசு ரத்து செய்ததால் மிகப்பெரும் முதலீடுகளை ஈர்க்கும் வாய்ப்பு பறிபோனதாக திமுக உள்ளிட்ட கட்சிகள் கூறி வருகின்றன. மேலும் தவெக ஆட்சி அமைந்த பிறகு தமிழகத்திலிருந்து சில பன்னாட்டு நிறுவனங்கள் ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று விட்டதாகவும், அதனால் பெரும் வருவாய் இழப்பு, வேலை இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதை சான்று காட்டும் விதமாக கடந்த சில மாதங்களில் மற்ற தென் மாநிலங்களின் ஜிஎஸ்டி வரி வருவாய் இரண்டு இலக்கங்களில் வளர்ந்துக் கொண்டிருக்க தமிழகத்தின் விகிதமோ 3 சதவீதம் என்ற நிலையில் பின் தங்கியுள்ளது.
இதையெல்லாம் தாண்டி தவெகவிற்கு மிகப்பெரும் தலைவலியாக சட்டம், ஒழுங்கி பிரச்சினைகள் தலைதூக்கி வருகின்றன. தீபாவளி நாளில் மட்டும் 11 கொலைகள் நடந்திருப்பதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. மேலும் தவெக அமைச்சர்கள் பலரே சர்ச்சைக்குரிய பிரச்சினைகளில் சிக்குவதும் மக்களிடையே தவெக மீதான ஒரு தயக்கத்தை ஏற்படுத்தக் கூடும்.
இப்படியாக தவெக நிர்வாகிகள் மீதான குற்றச்சாட்டுகளும், ஆட்சியின் குறைபாடுகளும் முதல்வர் விஜய்யின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படுகிறதா என்பது குறித்தும் சில அரசியல் பிரமுகர்கள் கவலைத் தெரிவித்து வருகின்றனர். விஜய்யின் இமாலய பிம்பம் எப்படி மக்களை அலைக்கடலென அவரிடம் கொண்டு வந்ததோ, தற்போது அதே பிம்பத்தால் அவர் பொது இடங்களுக்கு வெகு இயல்பாக செல்வதும், மக்களிடம் பேசுவதும் பிரச்சினையாக உள்ளது. ஆனாலும் விஜய் தனது கவனத்திற்கு வரும் அனைத்து பிரச்சினைகள் குறித்தும் உரிய அதிகாரிகள், அமைச்சர்களோடு ஆலோசித்து முடிவுகளை எடுத்து வருகிறார் என்கின்றனர் தவெகவினர்.
புதிய ஆட்சியின் 6 மாத கால ஆட்சி ஒருபக்கம் மதுக்கடைகள் மூடல், லஞ்சம் ஒழிப்பு என சில விஷயங்களில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கும் அதே வேளையில், சட்டம், ஒழுங்கு நேரடியாக மக்களை பாதிக்கும் விஷயம் என்பதால் அதில் கூடுதல் கவனம் செலுத்துவதும், பொருளாதார முன்னேற்றம், வேலைவாய்ப்பையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பது பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

