பேரணாம்பட்டு அடுத்த ஏரிகுத்தி கிராமப் பகுதியில் சிலர் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் ரேஷன் அரிசியை சட்டவிரோதமாகப் பதுக்கி வைத்து, பின்னர் ஆந்திரா, கர்நாடகம் உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு கடத்திச் செல்வதாக பேரணாம்பட்டு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, தகவலின் அடிப்படையில் பேரணாம்பட்டு போலீசார் சம்பந்தப்பட்ட ஏரிகுத்தி கிராமப் பகுதிக்கு விரைந்து சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் உள்ள முள் புதரில் சந்தேகத்திற்கிடமான வகையில் சோதனை மேற்கொண்டனர்.
Buy Now ! Pay Daily !
அதில், யாருக்கும் தெரியாத வகையில் முள் புதருக்குள் 17 மூட்டைகளில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் மூட்டைகளைப் பறிமுதல் செய்து ஆய்வு செய்ததில், அவற்றில் சுமார் ஒரு டன் ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, ஒரு டன் ரேஷன் அரிசியையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், பொதுமக்களுக்கு வழங்கப்படும் இலவச ரேஷன் அரிசியை முள் புதரில் பதுக்கி வைத்தது யார்? இதன் பின்னணியில் கடத்தல் கும்பல் செயல்படுகிறதா? அரிசியை வெளி மாநிலங்களுக்கு கடத்திச் செல்ல திட்டமிடப்பட்டிருந்ததா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பேரணாம்பட்டு அருகே முள் புதரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






