இன்றைய காலகட்டத்தில் ஒரு குடும்பத்தில் திருமணம் என்பது மகிழ்ச்சியான நிகழ்வாக இருந்தாலும், அதற்கான செலவுகளைச் சமாளிப்பது பல குடும்பங்களுக்கு பெரும் சவாலாக உள்ளது. குறிப்பாக, பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்கள் தங்களது மகளின் திருமணத்திற்காக நகை, ஆடை உள்ளிட்ட தேவைகளை ஏற்பாடு செய்யப் பல சிரமங்களைச் சந்திக்கின்றன. இதுபோன்ற குடும்பங்களுக்கு உதவும் வகையில் தமிழக அரசு அண்ணன் சீர் திட்டத்தை அறிவித்துள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ் தகுதியுடைய மணப்பெண்களுக்கு திருமணத்தின்போது 22 காரட் மதிப்புள்ள 8 கிராம் தங்க நாணயமும், ஒரு பட்டுப்புடவையும் வழங்கப்பட உள்ளது. இதற்காக அரசு முதற்கட்டமாக ரூ.812 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. தற்போது இத்திட்டத்திற்கான தகுதிகள் மற்றும் விண்ணப்பிக்கும் வழிமுறைகளையும் அரசு வெளியிட்டுள்ளது.
Buy Now ! Pay Daily !
அண்ணன் சீர் திட்டத்தில் யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? இந்தத் திட்டத்தில் விண்ணப்பிக்க சில முக்கியமான தகுதிகளை அரசு அறிவித்துள்ளது. - மணமக்கள் இருவரும் குறைந்தபட்ச சட்டப்பூர்வ திருமண வயதை நிறைவு செய்திருக்க வேண்டும். - மணப்பெண்ணின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். - குடும்ப அட்டையில் மணப்பெண்ணின் பெயர் இடம்பெற்றிருக்க வேண்டும். - திருமண நிதியுதவி வழங்கும் பிற அரசு திட்டங்களில் ஏற்கெனவே பயன் பெற்றிருக்கக் கூடாது.
அண்ணன் சீர் விண்ணப்பங்களுக்கான செயல்முறை என்ன? இந்தத் திட்டத்தில் பயன்பெற விரும்பும் பெண்கள் அரசு இ-சேவை மையங்களுக்குச் சென்று நேரடியாக விண்ணப்பிக்கலாம். அல்லது வீட்டிலிருந்தே இணையதளம் வாயிலாகவும் விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பிக்கும் முறை: - முதலில் தமிழ்நாடு இ-சேவை இணையதளத்திற்குச் செல்ல வேண்டும். - அண்ணன் சீர் திட்டத்திற்கான விண்ணப்பப் பிரிவைத் தேர்வு செய்ய வேண்டும். - விண்ணப்பதாரரின் ஆதார் எண் மற்றும் குடும்ப அட்டை எண் உள்ளிட்ட விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும். - திருமணப் பத்திரிகையைப் பதிவேற்றம் செய்ய வேண்டும். - தேவையான விவரங்களைச் சரிபார்த்து விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும். - விண்ணப்பதாரரின் ஆதார் எண் மற்றும் குடும்ப அட்டை எண் மூலம் தகுதிகள் சரிபார்க்கப்படும். தகுதியான ஒவ்வொரு விண்ணப்பத்திற்கும் தனித்துவ அடையாள எண் வழங்கப்படும். விண்ணப்பத்தின் நிலை குறித்த தகவல்கள் குறுஞ்செய்தி, வாட்ஸ்அப் மற்றும் மின்னஞ்சல் வழியாகத் தெரிவிக்கப்படும்.
எப்போது விண்ணப்பிக்க வேண்டும்? திருமணத் தேதிக்கு 60 நாட்களுக்கு முன்பிருந்து திருமண நாள் வரை விண்ணப்பிக்கலாம் என அரசு தெரிவித்துள்ளது. மேலும், 2026 அக்டோபர் 5 முதல் 2027 ஜனவரி 15 வரை நடைபெறும் திருமணங்களுக்கு, 2027 ஜனவரி 15ஆம் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. எனவே, இந்தக் காலகட்டத்தில் திருமணம் நடைபெற உள்ளவர்கள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் விண்ணப்பிப்பது அவசியம்.
திருமணத்திற்குப் பிறகு செய்ய வேண்டியது என்ன? விண்ணப்பித்துவிட்டால் மட்டும் போதாது. திருமணம் நடைபெற்ற 15 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட திருமணத்தைத் தமிழ்நாட்டில் பதிவு செய்ய வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. ஒருவேளை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால், அதற்கான காரணம் விண்ணப்பதாரருக்குத் தெரிவிக்கப்படும். அதில் உடன்பாடு இல்லாதவர்கள் மேல்முறையீடு செய்யவும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
திருமணச் செலவுகளைச் சமாளிக்கச் சிரமப்படும் தகுதியுள்ள குடும்பங்களுக்கு இந்தத் திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதால், தகுதியுடைய மணப்பெண்கள் விண்ணப்ப விதிமுறைகளையும் காலக்கெடுவையும் கவனித்து விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.






