இந்தியா ஒரு செக்யூலர் நாடாக இருந்து வரும் நிலையில், ஒருவர் தான் விரும்பும் மதத்தை பின்பற்றவும், மதம் மாறவும் ஜனநாயக ரீதியாக அவருக்கு உரிமை உள்ளது. ஆனால் அதேசமயம் சில சமயத்தை சார்ந்தவர்கள் மிரட்டி, பேராசைக் காட்டி மக்களை மதம் மாற்றுவதாக குற்றச்சாட்டுகளும் உள்ளன. மதமாற்ற தடை சட்டம் மத்திய அளவில் அமலில் இல்லாவிட்டாலும் மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்களில், மாநில அளவில் இந்த தடை சட்டம் அமலில் உள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் இஸ்லாமிய மதத்தை தழுவும் பிற சமயத்தாருக்கும் இஸ்லாமியர்களுக்கு வழங்கப்படும் இடஒதுக்கீட்டை வழங்க முந்தைய திமுக அரசு சமயத்தில் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. ஆனால் அந்த உத்தரவு உச்ச நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது. ஏற்கனவே வழிவழியாக இருக்கும் இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீட்டை, புதிதாக மதம் மாறும் நபர்களுக்கு பகிர இயலாது என்பதை நீதிமன்றம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில்தான் சமீபத்தில் பேசிய சிறுபான்மையினர் நலன் அமைச்சர் ஷாஜகான், இஸ்லாமியராக மதம் மாறியவர்களுக்கும் இடஒதுக்கீடு கிடைக்கும் வகையில் மாநில வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ள உள்ளதாக பேசியிருந்தார்.
Buy Now ! Pay Daily !
அவரது இந்த பேச்சுக்கு பாஜக தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர், திமுக இந்த அரசாணையை கொண்டு வந்தபோதே உச்சநீதிமன்றம் ’ஒருவர் இஸ்லாமியராக மதம் மாறுவதால் மட்டுமே, அவர் இஸ்லாமிய இடஒதுக்கீட்டிற்கு தகுதி பெற்றவர் ஆகிவிட முடியாது’ என கூறியதை சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் தற்போதைய தவெக அரசு சமூகநீதி என்ற பெயரில் மத அரசியலை கையில் எடுக்கிறதா? எனக் கேள்வி எழுப்பியுள்ள அவர், இந்த சட்ட திருத்தம் மேற்கொள்ளப்பட்டால், காலம் காலமாக உள்ள இஸ்லாமிய சமூகத்தினரின் இடஒதுக்கீடு மற்றும் உரிமைகள் பறிபோகும் சூழல் ஏற்படுவதுடன், இடஒதுக்கீட்டிற்காகவும், சலுகைகளுக்காகவும் மதம் மாறும் போக்கை ஊக்குவிக்கும் என்றும் எச்சரித்துள்ளார்.
இவற்றை கருத்தில் கொண்டு தமிழக முதல்வர் வாக்கு வங்கி அரசியலுக்காக சமூகத்தின் நிலைத்தன்மையில் சமரசம் செய்யக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.






