வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிரமடைந்து நேற்று புயலாக மாறிய நிலையில், அதற்கு ’அக்வான்’ என பெயரிடப்பட்டது. இந்த புயல் இன்று தீவிர புயலாக மாறியுள்ள நிலையில் தமிழகத்தில் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் புயலின் பாதை ஆந்திராவை நோக்கி நகர்ந்துள்ளதால் தமிழகத்திற்கான ஆரஞ்சு அலெர்ட் திரும்பப் பெறப்பட்டுள்ளது.
தற்போது வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, ”நேற்று (16-11-2026) தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்று மாலை 5:30 மணி அளவில் "அக்வான்" (Akvan) புயலாக (Cyclonic Storm) வலுப்பெற்று தெற்கு வங்கக்கடலின் மத்தியப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவியது.
Buy Now ! Pay Daily !
இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று காலை (17-11-2026) 08:30 மணி அளவில் அதே பகுதியில் நிலவுகிறது. இது மேலும் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று மாலை மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதியில் தீவிர புயலாக (Severe Cyclonic Storm) வலுப்பெறக்கூடும். இது மேலும் வடமேற்கு திசையில் நகர்ந்து நவம்பர் 19ம் தேதி காலை மிகத் தீவிரப் புயலாக வலுப்பெறக்கூடும்.
இது மேலும் வடமேற்கு திசையில் நகர்ந்து, நவம்பர் 20ம் தேதி நண்பகல் நெல்லூர் - துனி இடையே ஆந்திரப் பிரதேச கடற்கரையை மிகத் தீவிரப் புயலாக (Very Severe Cyclonic Storm) கடக்கக்கூடும். அப்போது மணிக்கு 120 முதல் 130 கி.மீ வேகத்திலும், இடையிடையே மணிக்கு 145 கி.மீ வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும்.
அடுத்த சில நாட்களுக்கான மழை பற்றிய அறிவிப்பு:
17-11-2026: தென் தமிழகத்தில் ஒரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.
18-11-2026: சென்னை, திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். தென் தமிழகம், ஏனைய வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.
19-11-2026: சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும்.
செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம் மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.
20-11-2026:மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.
21-11-2026: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.






