← முகப்பு

இனி UPI மூலமாகவே PF பணம் எடுக்கலாம்! எப்படி தெரியுமா?

பி.எஃப். கணக்கில் உள்ள பணத்தை எடுப்பது இனி எளிதாகப் போகிறது. UPI மூலம் பணம் எடுக்கும் புதிய வசதியை EPFO அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. இந்த வசதி எப்போது நடைமுறைக்கு வரும், குறைந்தபட்சம் எவ்வளவு பணம் எடுக்கலாம் மற்றும் இதனை எப்படி பயன்படுத்துவது என்பதை விரிவாகப் பார்க்கலாம்.

இனி UPI மூலமாகவே PF பணம் எடுக்கலாம்! எப்படி தெரியுமா?

தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் எதிர்கால நிதிப் பாதுகாப்பிற்காக மாதந்தோறும் சம்பளத்தில் இருந்து குறிப்பிட்ட தொகை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (EPF) கணக்கில் சேமிக்கப்படுகிறது. இந்தச் சேமிப்பு ஓய்வுக்காலத் தேவைகள் மட்டுமின்றி, எதிர்பாராத மருத்துவச் செலவுகள், அவசரத் தேவைகள் மற்றும் வீடு வாங்குவது போன்ற முக்கியமான செலவுகளுக்கும் பெரிதும் உதவுகிறது. இவ்வாறு சேமிக்கப்படும் பணத்தைத் தேவையான நேரத்தில் திரும்பப் பெற தற்போது EPFO இணையதளத்தில் விண்ணப்பித்து, பல்வேறு விவரங்களைச் சமர்ப்பிக்க வேண்டியுள்ளது.

இந்த நடைமுறையை எளிமைப்படுத்தும் நோக்கில், PF கணக்கிலிருந்து UPI மூலமாகவே பணம் எடுக்கும் புதிய வசதியைத் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (EPFO) அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

இதன்படி, வரும் டிசம்பர் மாத இறுதிக்குள் இந்த வசதி நடைமுறைக்கு வர வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் PF சந்தாதாரர்கள் பணம் எடுப்பதற்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவசியம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய UPI பணப்பரிவர்த்தனை வசதியில் குறைந்தபட்சமாக ரூ.1,000 நிர்ணயிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. சிறிய தொகைகளுக்காக அடிக்கடி விண்ணப்பிப்பதால் ஏற்படும் பரிவர்த்தனைச் சுமையைக் குறைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், இது தொடர்பான இறுதி விதிமுறைகள் மற்றும் அதிகபட்ச பணம் எடுக்கும் வரம்பு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக வேண்டியுள்ளது.

UPI மூலம் PF பணம் எடுப்பதற்கான தொழில்நுட்பப் பணிகள் நிறைவடைந்துள்ளன. மேலும், பாதுகாப்பு மற்றும் செயல்திறனை உறுதிப்படுத்துவதற்காக இரண்டு கட்டங்களாகச் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.

இந்தச் சோதனையில் 102 PF சந்தாதாரர்களின் பணம் எடுக்கும் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு, சுமார் ரூ.4.97 லட்சம் அவர்களது வங்கிக் கணக்குகளில் உடனடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது. இந்தச் சோதனைகள் வெற்றிகரமாக முடிந்துள்ள நிலையில், தொழில்நுட்ப அமைப்புகளை மேம்படுத்தும் பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

BHIM செயலி மூலம் பணம் பெறலாம்

இந்தப் புதிய வசதி நடைமுறைக்கு வரும்போது BHIM செயலி மூலம் PF பணத்தைப் பெறும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதற்காக தேசிய பணப்பரிவர்த்தனைக் கழகம் (NPCI), பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட நிறுவனங்களுடன் இணைந்து EPFO தொழில்நுட்பப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

மேலும், PF கணக்குடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கு மற்றும் UPI விவரங்கள் சரிபார்க்கப்பட்டிருப்பது அவசியமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பணம் எடுக்கும் விதிமுறைகளில் மாற்றம் இருக்குமா?

UPI வசதி அறிமுகப்படுத்தப்பட்டாலும், ஏற்கனவே நடைமுறையில் உள்ள PF பணம் எடுக்கும் விதிமுறைகள் மற்றும் வரம்புகள் தொடர்ந்து அமலில் இருக்கும். அதாவது, UPI வசதி வந்துவிட்டதால் கணக்கில் உள்ள மொத்தப் பணத்தையும் எவ்விதக் கட்டுப்பாடுமின்றி எடுக்க முடியாது.

தகுதி, பணம் எடுப்பதற்கான காரணம் மற்றும் அனுமதிக்கப்பட்ட தொகை ஆகியவற்றின் அடிப்படையிலேயே பணம் பெற முடியும். மொத்தத்தில், இந்தப் புதிய வசதி நடைமுறைக்கு வந்தால் PF சந்தாதாரர்களுக்குப் பணம் எடுக்கும் நடைமுறை மேலும் எளிமையாகும். குறிப்பாக அவசரத் தேவைகளுக்காக PF பணத்தை எடுக்க நினைப்பவர்களுக்கு இந்த வசதி பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !