← முகப்புசிவகங்கை →

50 ஆண்டுகளாகக் குடியிருக்கும் மக்களுக்கு நெருக்கடி? – ரயில்வே இடத்தை அளவீடு செய்ய எதிர்ப்பு

50 ஆண்டுகளுக்கும் மேலாக வசிக்கும் 70-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் எதிர்ப்பு – எம்எல்ஏ இளங்கோவன், வட்டாட்சியர் மகாதேவன் பேச்சுவார்த்தை; மாற்று இடம் வழங்கிய பின்னரே அளவீடு செய்ய வலியுறுத்தல்!

50 ஆண்டுகளாகக் குடியிருக்கும் மக்களுக்கு நெருக்கடி? – ரயில்வே இடத்தை அளவீடு செய்ய எதிர்ப்பு

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ரயில் நிலையம் அருகே ரயில்வேக்குச் சொந்தமான இடத்தில் 70-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வீடுகள் கட்டி 50 ஆண்டுகளுக்கும் மேலாகக் குடியிருந்து வருகின்றனர்.

இந்நிலையில், சமீபத்தில் மானாமதுரை ரயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் ஓம்பிரகாஷ் மீனா, ஆக்கிரமிப்பில் உள்ள ரயில்வே இடத்தை மீட்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதையடுத்து, கடந்த சில வாரங்களாக ரயில்வே அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்தை அளவீடு செய்து மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

இதன் தொடர்ச்சியாக, ரயில் நிலையம் அருகே உள்ள குடியிருப்புப் பகுதியில் அளவீடு செய்ய ரயில்வே அதிகாரிகள் சென்றபோது, அங்கு 50 ஆண்டுகளுக்கும் மேலாகக் குடியிருந்து வரும் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அதிகாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதற்கிடையே, இந்த அளவீடு நடவடிக்கை குறித்து தனக்கு எந்தவிதமான முன்கூட்டிய தகவலும் தெரிவிக்கப்படவில்லை என வட்டாட்சியர் மகாதேவன் அதிருப்தி தெரிவித்தார். மேலும், "எனக்கே தகவல் தெரிவிக்காமல் எப்படி இந்த நடவடிக்கையை மேற்கொள்கிறீர்கள்? ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் அதற்கு யார் பொறுப்பேற்பது?" எனக் கேள்வி எழுப்பியதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் இளங்கோவன் மற்றும் வட்டாட்சியர் மகாதேவன் ஆகியோர் பொதுமக்கள் மற்றும் ரயில்வே அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, அப்பகுதியில் நீண்டகாலமாகக் குடியிருந்து வரும் மக்களுக்கு தமிழக அரசு சார்பில் மாற்று இடம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அந்தப் பணிகள் முடிவடைந்த பின்னரே ரயில்வே இடத்தை அளவீடு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

இதனைத் தொடர்ந்து, ரயில்வே அதிகாரிகள் தற்காலிகமாக அளவீடு செய்யும் பணியை நிறுத்திவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.

50 ஆண்டுகளுக்கும் மேலாகக் குடியிருந்து வரும் மக்களின் வாழ்வாதாரம் ஒருபுறம், ரயில்வேக்குச் சொந்தமான இடத்தை மீட்கும் நடவடிக்கை மறுபுறம் என மானாமதுரையில் இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !