அவையில் அரங்கேறிய நெகிழ்ச்சித் தருணம்
2027-ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள மாநிலத் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என ஜோர்டான் லேன் சில வாரங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, நியூ சவுத் வேல்ஸ் சட்டப்பேரவையில் தனது இறுதிப் பிரியாவிடை உரையை அவர் நிகழ்த்தினார்.
Buy Now ! Pay Daily !
உரையின் இறுதிக்கட்டத்தில், அவையின் மைய மேசைக்கு அருகே நின்றிருந்த அவர், சபாநாயகர் கிரெக் பைப்பரை நோக்கி, "சபாநாயகர் அவர்களே, ரைட் தொகுதி உறுப்பினராக எனது கடைசிக் கேள்வி எனது பேரன்புக்குரிய நடாலியிடம் கேட்கப்படுவதாகும்" என்று கூறினார். இதனைக் கேட்டதும் அவையில் இருந்த சக உறுப்பினர்கள் வியப்பில் ஆழ்ந்தனர்.
அடுத்த நொடியே, பார்வையாளர் மாடத்தில் அமர்ந்து நிகழ்வுகளைக் கவனித்துக் கொண்டிருந்த தனது 10 ஆண்டுகாலக் காதலி நடாலியை நோக்கித் திரும்பிய லேன், சற்றே நடுங்கும் கைகளுடன் மோதிரத்தை எடுத்துக் காட்டி, "என்னைத் திருமணம் செய்து கொள்வாயா?" என்று கேட்டார்.
நடாலியும் புன்னகையுடன் சம்மதம் தெரிவிக்க, ஒட்டுமொத்த அவையும் கரகோஷங்களாலும் ஆரவாரத்தாலும் அதிர்ந்தது. தொடர்ந்து நடாலியை நோக்கிச் சென்ற லேன், அவரது விரலில் நிச்சயதார்த்த மோதிரத்தை அணிவித்து, அன்புடன் முத்தமிட்டுத் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
நாடாளுமன்ற ஆவணத்தில் பதிவான காதல்
இந்த நெகிழ்ச்சியான தருணம் வெறும் நினைவாக மட்டும் நின்றுவிடாமல், வரலாற்று ஆவணமாகவும் மாற வேண்டும் என ஜோர்டான் லேன் விரும்பினார். மீண்டும் அவைக்குத் திரும்பிய அவர், "அவர் 'சரி' என்று சம்மதம் தெரிவித்துவிட்டார் என்பதை நாடாளுமன்ற அதிகாரப்பூர்வ ஆவணமான 'ஹன்சார்டில்' பதிவு செய்ய விரும்புகிறேன்" என்று குறிப்பிட்டார்.
இதனைத் தொடர்ந்து பேசிய சபாநாயகர் கிரெக் பைப்பர், சக உறுப்பினர்களின் கொண்டாட்டத்தில் இணைந்து கொண்டு, "இந்த 58-வது நாடாளுமன்றம் இனி 'காதலின் நாடாளுமன்றம்' என்று நினைவுகூரப்படும்" என நெகிழ்ச்சியுடன் பாராட்டினார்.






