ஈரப்பதமிக்க கிழக்குத் திசை காற்று காரணமாக டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக திருச்சி, தஞ்சை, நாகை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது.
இதேபோல் இன்றைய வானிலையைப் பொறுத்தவரை ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Buy Now ! Pay Daily !
இந்நிலையில் தென்காசி மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் ஆங்காங்கே சில இடங்களில் கடந்த சில தினங்களாகவே இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
குறிப்பாக, நேற்று இரவு பெய்த பலத்த மழையின் காரணமாக வனப்பகுதிகளில் நீர்வரத்து வெகுவாக அதிகரித்துள்ளது. இதன் எதிரொலியாக, குற்றாலம் பிரதான அருவியில் இன்று அதிகாலை முதலே காட்டாற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.
இதனால், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு நலனைக் கருத்தில் கொண்டு, பிரதான அருவியில் குளிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தற்போது சபரிமலை சீசன் என்பதால், குற்றாலத்திற்கு வருகை தந்துள்ள ஏராளமான ஐயப்ப பக்தர்களும், சுற்றுலாப் பயணிகளும் அருவியில் குளிக்க முடியாமல் மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். நீர்வரத்து சீரான பிறகே குளிக்க அனுமதி வழங்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




