← முகப்பு

முதல் பங்கு விற்பனையிலேயே பல லட்சம் கோடி வசூல்.. SpaceX-ஐ முந்திய ஆந்த்ரோபிக்!

அமெரிக்கப் பங்குச்சந்தையில் செயற்கை நுண்ணறிவு நிறுவனமான ஆந்த்ரோபிக் , தனது பங்குகளைப் பட்டியலிட்டு பிரம்மாண்டமாக அறிமுகமாகியுள்ளது. நிறுவனத்தின் முதல் பொதுப் பங்கு வெளியீடான (IPO) மூலம் சுமார் 81.3 பில்லியன் டாலர் நிதியைத் திரட்டியுள்ள ஆந்த்ரோபிக், ஒரே நாளில் உலகின் அதிக மதிப்புமிக்க நிறுவனங்களின் பட்டியலில் இடம்பிடித்து முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

முதல் பங்கு விற்பனையிலேயே பல லட்சம் கோடி வசூல்.. SpaceX-ஐ முந்திய ஆந்த்ரோபிக்!

ஆந்த்ரோபிக் நிறுவனம் உருவாக்கியுள்ள பிரபலமான செயற்கை நுண்ணறிவு சாட்பாட்டான கிளாட் (Claude), உலகம் முழுவதும் பல்வேறு துறைகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, மென்பொருள் உருவாக்கம், தகவல் பகுப்பாய்வு, அலுவலகப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு கிளாட் AI பயன்படுத்தப்படுவதால், நிறுவனத்தின் வளர்ச்சி வேகமடைந்துள்ளது. இந்தச் சூழலில், அமெரிக்காவின் நாஸ்டாக் (Nasdaq) பங்குச்சந்தையில் ஆந்த்ரோபிக் தனது பங்குகளை நேற்று அறிமுகப்படுத்தியது. ஒரு பங்கின் IPO விலையாக 83 டாலர் நிர்ணயிக்கப்பட்டது. மொத்தம் 98 கோடி பங்குகள் விற்பனைக்கு வைக்கப்பட்டதன் மூலம், சுமார் 81.3 பில்லியன் டாலர் நிதி திரட்டப்பட்டது. இதன் மூலம், இதுவரை பங்குச்சந்தையில் நடைபெற்ற மிகப்பெரிய IPO என்ற சாதனையை ஆந்த்ரோபிக் படைத்துள்ளது.

இதற்கு முன்பு எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் சுமார் 75 பில்லியன் டாலர் நிதியைத் திரட்டி மிகப்பெரிய IPO என்ற சாதனையை வைத்திருந்தது. தற்போது அந்தச் சாதனையை ஆந்த்ரோபிக் முறியடித்துள்ளது.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் இணை நிறுவனர் டாரியோ அமோடி
ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் இணை நிறுவனர் டாரியோ அமோடி

ஒரே நாளில் ட்ரில்லியன் டாலர் மதிப்பு

பங்குச்சந்தையில் வர்த்தகம் தொடங்கியதும் ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் பங்குகளுக்கு முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது. IPO விலையான 83 டாலரிலிருந்து பங்கின் விலை 111.50 டாலர் வரை உயர்ந்தது. இதன் காரணமாக, நிறுவனத்தின் சந்தை மதிப்பு வர்த்தகத்தின் தொடக்கத்தில் சுமார் 2 ட்ரில்லியன் டாலரை எட்டியது.

பின்னர் பங்கின் விலையில் ஏற்ற இறக்கம் ஏற்பட்டாலும், வர்த்தக முடிவில் ஒரு பங்கின் விலை 97.17 டாலராக நிலைபெற்றது. இது IPO விலையைவிட சுமார் 17 சதவீதம் அதிகமாகும். இதன் அடிப்படையில் நிறுவனத்தின் முழுமையாகக் கணக்கிடப்பட்ட சந்தை மதிப்பு சுமார் 1.75 ட்ரில்லியன் டாலராக உயர்ந்தது. இதன் மூலம், பங்குச்சந்தையில் அறிமுகமான முதல் நாளிலேயே ட்ரில்லியன் டாலர் மதிப்பைக் கடந்த நிறுவனங்களில் ஒன்றாக ஆந்த்ரோபிக் உருவெடுத்துள்ளது.

வருவாய் அதிகரிப்பு.. நஷ்டமும் தொடர்கிறது

ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு அதன் கிளாட் AI சேவைகளுக்குக் கிடைத்த வரவேற்பு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, நிறுவனங்களுக்கான AI சேவைகள் மற்றும் கிளாட் கோடு (Claude Code) என்ற மென்பொருள் உருவாக்க உதவும் கருவி ஆகியவை வருவாய் அதிகரிப்புக்குப் பங்களித்துள்ளன.

2026-ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மட்டும் நிறுவனம் 16.2 பில்லியன் டாலர் வருவாய் ஈட்டியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்கான கணினி உள்கட்டமைப்பு, தரவு மையங்கள் மற்றும் சிப் பயன்பாடு போன்றவற்றுக்கு அதிகளவில் முதலீடு செய்ய வேண்டியிருப்பதால் நிறுவனத்தின் செலவுகளும் அதிகரித்து வருகின்றனஎன கூறப்படுகிறது.

மேலும், நிறுவனம் இன்னும் லாபம் ஈட்டாத நிலையில் இருப்பதும், அதன் கடன் மற்றும் எதிர்கால முதலீட்டுச் செலவுகள் குறித்த கவலைகளும் முதலீட்டாளர்கள் மத்தியில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.

இருப்பினும், உலகளவில் செயற்கை நுண்ணறிவுத் துறைக்கு அதிகரித்து வரும் தேவையை வெளிப்படுத்தும் முக்கிய நிகழ்வாக ஆந்த்ரோபிக்கின் IPO பார்க்கப்படுகிறது. எதிர்காலத்தில் AI நிறுவனங்களின் சந்தை மதிப்பு மற்றும் முதலீட்டுத் துறையில் ஏற்படக்கூடிய மாற்றங்களுக்கு இந்தப் பங்குச்சந்தை அறிமுகம் ஒரு முக்கிய அளவுகோலாக அமையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !