மாதந்தோறும் மொபைல் ரீசார்ஜ் செய்வதற்கே கணிசமான தொகையைச் செலவிட வேண்டியுள்ளது குறிப்பாக, இணையத்தைப் பயன்படுத்தாமல் வெறும் போன் அழைப்புகளுக்காக மட்டுமே சிம் கார்டு வைத்திருப்பவர்களுக்கு இது கூடுதல் சுமையாக உள்ளது. அப்படிப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் புதிய வாய்ஸ்-ஒன்லி ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. வெறும் ரூ.147 முதல் தொடங்கும் இந்தத் திட்டங்கள் தற்போது மக்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளன.
வழக்கமான ரீசார்ஜ் திட்டங்களில் அழைப்புகள், எஸ்எம்எஸ் வசதிகளுடன் தினசரி 1 ஜிபி, 1.5 ஜிபி அல்லது 2 ஜிபி டேட்டாவும் வழங்கப்படுகிறது. ஆனால், இணைய வசதியைப் பயன்படுத்தாதவர்கள் தங்களுக்குத் தேவையில்லாத டேட்டாவிற்கும் சேர்த்துப் பணம் செலுத்த வேண்டிய நிலை இருந்து வந்தது. இந்தப் பிரச்சினைக்குத் தீர்வாகவே வாய்ஸ் மற்றும் எஸ்எம்எஸ் மட்டும் கொண்ட பிரத்யேக ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது ஜியோ.
Buy Now ! Pay Daily !
TRAI உத்தரவால் வந்த மாற்றம்
இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான TRAI, வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப ரீசார்ஜ் திட்டங்களைத் தேர்வு செய்யும் வாய்ப்பை ஏற்படுத்தும் நோக்கில் முக்கியமான உத்தரவைப் பிறப்பித்தது. இதன்படி, தொலைத்தொடர்பு நிறுவனங்கள் குறைந்தபட்சம் ஒரு வாய்ஸ் மற்றும் எஸ்எம்எஸ் மட்டும் கொண்ட பிரத்யேக ஸ்பெஷல் டேரிஃப் வவுச்சரை (STV) வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
இதன் மூலம் குறிப்பாக மூத்த குடிமக்கள், கிராமப்புறப் பயனர்கள், குறைந்த அளவில் இணையத்தைப் பயன்படுத்துபவர்கள் மற்றும் சாதாரண கீபேட் போன் வைத்திருப்பவர்கள் பயனடைய முடியும். இந்த விதிமுறை 2025 ஜனவரி 22 முதல் நடைமுறைக்கு வந்தது. தற்போது ஜியோவும் தனது வாய்ஸ்-ஒன்லி திட்டங்களின் பட்டியலை விரிவுபடுத்தியுள்ளது. இதில் ஆறு வெவ்வேறு விலை மற்றும் வேலிடிட்டி கொண்ட திட்டங்கள் இடம்பெற்றுள்ளன.
ஜியோவின் 6 வாய்ஸ்-ஒன்லி ரீசார்ஜ் திட்டங்கள் என்னென்ன?
1. ரூ.147 திட்டம்: ஜியோவின் இந்தப் புதிய பட்டியலில் குறைந்த விலையிலான திட்டம் இதுதான். வெறும் ரூ.147 செலுத்தினால் 22 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். இந்தக் காலகட்டத்தில் அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் மற்றும் 300 எஸ்எம்எஸ் வழங்கப்படுகின்றன. குறைந்த நாட்களுக்கு ரீசார்ஜ் செய்ய விரும்புவோருக்கு இது ஏற்ற தேர்வாக இருக்கும்.
2. ரூ.177 திட்டம்: 28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட இந்தத் திட்டத்தில் அன்லிமிடெட் அழைப்புகள் மற்றும் 300 எஸ்எம்எஸ் கிடைக்கின்றன. மாதாந்திர ரீசார்ஜ் செய்ய விரும்புபவர்களுக்கு இது ஒரு முக்கியமான தேர்வாகும்.
3. ரூ.196 திட்டம்: 30 நாட்கள் முழுமையான வேலிடிட்டி வேண்டும் என்பவர்களுக்காக இந்தத் திட்டம் வழங்கப்படுகிறது. ரூ.196 செலுத்தினால் அன்லிமிடெட் காலிங் மற்றும் 300 எஸ்எம்எஸ் கிடைக்கும்.
4. ரூ.197 திட்டம்: ஒவ்வொரு மாதமும் ஒரே தேதியில் ரீசார்ஜ் செய்ய விரும்புபவர்களுக்காக இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது காலண்டர் மாத வேலிடிட்டியைக் கொண்டது. இதிலும் அன்லிமிடெட் காலிங் மற்றும் 300 எஸ்எம்எஸ் வழங்கப்படுகின்றன.
5. ரூ.448 திட்டம்: நீண்ட நாட்களுக்கு ரீசார்ஜ் செய்ய விரும்புவோருக்கு இந்தத் திட்டம் பயனுள்ளதாக இருக்கும். 84 நாட்கள் வேலிடிட்டி, அன்லிமிடெட் காலிங் மற்றும் 1,000 எஸ்எம்எஸ் இதில் கிடைக்கின்றன. மேலும், JioTV மற்றும் JioAICloud போன்ற கூடுதல் சேவைகளுக்கான அணுகலும் வழங்கப்படுகிறது.
6. ரூ.1,748 திட்டம்: அடிக்கடி ரீசார்ஜ் செய்ய விரும்பாதவர்களுக்காக இந்த நீண்டகாலத் திட்டம் வழங்கப்படுகிறது. ரூ.1,748 செலுத்தினால் 336 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். இதில் அன்லிமிடெட் காலிங் மற்றும் 3,600 எஸ்எம்எஸ் வழங்கப்படுகின்றன. கூடுதலாக JioTV மற்றும் JioAICloud சேவைகளும் இடம்பெறுகின்றன.
ஏர்டெல், Vi-யை விட ஜியோ விலை குறைவா?
ஏர்டெல் மற்றும் Vi நிறுவனங்களில் 28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட வாய்ஸ்-ஒன்லி திட்டங்களின் விலை ரூ.185 ஆக உள்ளது. ஆனால் ஜியோ அதே காலகட்டத்திற்கு ரூ.177 மட்டுமே வசூலிக்கிறது.
அதேபோல், 30 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டங்களுக்கு ஏர்டெல் மற்றும் Vi ரூ.203 வசூலிக்கும் நிலையில், ஜியோ ரூ.196-க்கு வழங்குகிறது. காலண்டர் மாதத் திட்டத்திலும் போட்டி நிறுவனங்களின் ரூ.206 கட்டணத்துடன் ஒப்பிடும்போது ஜியோ ரூ.197 என்ற குறைந்த விலையை நிர்ணயித்துள்ளது.
நீண்டகாலத் திட்டங்களிலும் ஜியோ விலை அடிப்படையில் போட்டித்தன்மையுடன் உள்ளது. 84 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டத்திற்கு ஏர்டெல் ரூ.469, Vi ரூ.470 வசூலிக்கின்றன. இவற்றில் 900 எஸ்எம்எஸ் வழங்கப்படும் நிலையில், ஜியோ ரூ.448-க்கு 1,000 எஸ்எம்எஸ் வழங்குகிறது.
இருப்பினும், நீண்டகாலத் திட்டங்களை ஒப்பிடும்போது வேலிடிட்டியையும் கவனிக்க வேண்டும். ஏர்டெல் மற்றும் Vi நிறுவனங்களின் வருடாந்திரத் திட்டங்கள் ரூ.1,849-க்கு 365 நாட்கள் வேலிடிட்டி வழங்குகின்றன. ஜியோவின் ரூ.1,748 திட்டம் விலை குறைவாக இருந்தாலும் 336 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கொண்டது.
இன்டர்நெட் அவசரமாகத் தேவைப்பட்டால் என்ன செய்வது?
வாய்ஸ்-ஒன்லி திட்டங்களில் மொபைல் டேட்டா கிடையாது என்பதால், இணையம் தேவைப்படும் நேரங்களில் தனியாக டேட்டா ஆட்-ஆன் பேக்குகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதன் மூலம் அடிப்படை ரீசார்ஜில் தேவையில்லாத டேட்டாவுக்குப் பணம் செலுத்துவதைத் தவிர்க்க முடியும்.
யாருக்கெல்லாம் இந்தத் திட்டங்கள் பயனுள்ளதாக இருக்கும்?
இந்த வாய்ஸ்-ஒன்லி திட்டங்கள் குறிப்பாக மூன்று வகையான வாடிக்கையாளர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும். கீபேட் போன் பயன்படுத்தும் மூத்த குடிமக்கள் மற்றும் இணைய வசதி தேவையில்லாதவர்கள். வங்கி ஓடிபி, அவசர அழைப்புகள் போன்ற தேவைகளுக்காக இரண்டாவது சிம் கார்டு வைத்திருப்பவர்கள். அலுவலகம் அல்லது வீட்டில் வைஃபை மூலம் இணையத்தைப் பயன்படுத்துவதால் மொபைல் டேட்டா அதிகம் தேவைப்படாதவர்கள்.
ரீசார்ஜ் செய்வது எப்படி?
இந்தத் திட்டங்களைப் பெற ஜியோவின் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது MyJio செயலிக்குச் செல்ல வேண்டும். அங்கு ரீசார்ஜ் திட்டங்களின் பட்டியலில் 'TRAI Mandated Packs' அல்லது 'Voice Only Plan' என்ற பிரிவைத் தேடித் தேர்வு செய்து பயன்படுத்திக்கொள்ளலாம்.
மொத்தத்தில், இணையத்தை அதிகம் பயன்படுத்தாத வாடிக்கையாளர்களுக்குத் தேவையான சேவைகளுக்கு மட்டுமே பணம் செலுத்தும் வாய்ப்பை ஜியோவின் இந்தத் புதிய திட்டங்கள் வழங்குகின்றன. குறிப்பாக ரூ.147 முதல் தொடங்கும் திட்டம் குறைந்த செலவில் சிம் கார்டைச் செயல்பாட்டில் வைத்திருக்க விரும்புவோரின் கவனத்தை இது ஈர்த்துள்ளது.



