சர்ச்சை நாயகன் சல்மான் கான்
பாலிவுட்டில் 90ஸ் காலத்திலிருந்தே பிரபலமான 3 ’கான்’ நடிகர்கள் ஷாருக்கான், சல்மான் கான், ஆமீர் கான். இதில் மற்ற ’கான்’களை விட சல்மான்கானுக்கு மட்டும் சர்ச்சைகளும், பிரச்சினைகளும் எப்போதுமே வந்துக் கொண்டிருக்கும். காட்டில் மானை சுட்ட விவகாரம் தொடங்கி, ரசிகரை தாக்கியது, மது அருந்திவிட்டு ப்ளாட்பாரத்தில் உறங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது காரை ஏற்றியது, ஐஸ்வர்யா ராய், கத்ரீனா கைஃப் உடனான காதல் மற்றும் முறிவுகள் என இவரை பற்றி தொடர்ந்து செய்திகள் வந்துக் கொண்டேயிருக்கும்.
Buy Now ! Pay Daily !
இப்போதும் ஷாரூக்கான், ஆமீர்கான் படங்களுக்கு ஒரு பெரிய எதிர்பார்ப்பு இருந்து வரும் நிலையில், அந்த நிலையிலிருந்து மிகவும் சரிந்துவிட்டார் சல்மான்கான். சமீபமாக இவர் நடித்த பல படங்கள் தோல்வியடைந்துள்ளன. கடந்த ஆண்டு தமிழ் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான்கான் நடித்த ’சிக்கந்தர்’ வெளியாகி வரலாற்று தோல்வியை சந்தித்தது. அதற்கு சல்மான்கான் தற்போது வரை பல மேடைகளில் முருகதாஸை குற்றம் பேசி வருகிறார்.
நெகட்டிவ் விமர்சனம்
இந்நிலையில்தான் சல்மான்கான் நடிக்கும் புதிய படமான ’மாத்ருபூமி’ என்ற படத்தின் ட்ரெய்லர் சில நாட்கள் முன்பு வெளியானது. இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியானதுமே அதில் இடம்பெற்றுள்ள பல காட்சிகள் ஏஐ போல தெரிவதாகவும், சல்மான்கான் பல காட்சிகளில் நடிக்கவேயில்லை ஏஐ பயன்படுத்தி ஏமாற்றப் பார்க்கிறார்கள் என்றும் நெகட்டிவ் விமர்சனங்கள் பரவத் தொடங்கின. டிசம்பர் 2 படம் ரிலீஸ் என்று அறிவித்திருந்த போதிலும் இந்தி பேசும் மாநிலங்களிலேயே பல விநியோகஸ்தர்கள் படத்தை வாங்கத் தயங்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் வேதனயடைந்துள்ளாராம் சல்மான்கான்.
பதிலளித்த சல்மான்கான்
இந்நிலையில் ஐதராபாத்தில் நடந்த மாத்ருபூமி பட ப்ரொமோஷன் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட சல்மான்கான் நெகட்டிவ் விமர்சனங்களுக்கு பதில் அளித்துப் பேசியுள்ளார். அதில் அவர் ”என்னை பற்றியும், என் படத்தை பற்றியும் தவறாக பேசுவதன் மூலம் சிலர் நிறைய ஃபாலோவர்களை பெற்று பணம் ஈட்ட முடியும் என்றால் அதற்காக நான் மகிழ்கிறேன். அவர்களுக்கு கடவுள் நல்லது செய்யட்டும்.
ஒரு புத்தக அட்டையை வைத்து உள்ளடக்கத்தை மதிப்பிடக்கூடாது என்பார்கள். ஆனால் நீங்கள் ஒரு ட்ரெய்லரை வைத்து என் படத்தை மதிப்பிட்டு விட்டீர்கள். பலர் ட்ரெய்லரிலேயே முழு படத்தையும் காட்டிவிட்டதாக சொல்கிறார்கள். டிசம்பர் 2ம் தேதி வாருங்கள். முழு படத்தையும் காட்டுகிறோம். நான் இந்த படத்தில் நடித்திருக்கும் பல காட்சிகள் ஏஐயால் உருவாக்கப்பட்டது என்றும், நான் நடிக்கவில்லை என்றும் கூறுகிறீர்கள். நீங்கள் அப்படிக் கூறுவதை, மிக கடினமாக உழைத்து அந்த காட்சிகளை படமாக்கிய தொழில்நுட்ப கலைஞர்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்” என பேசியுள்ளார்.
சல்மான் கானுக்கு இந்த படம் ஹிட் ஆகவில்லை என்றால் அடுத்தடுத்து படங்கள் நடிப்பது கடினம் என்று பேசிக் கொள்ளப்படும் நிலையில் இந்த படம் ஹிட் ஆகுமா என்பது சல்மான்கானின் நெடுநாளைய ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.





