2021ம் ஆண்டில் திமுக ஆட்சிக்கு வந்தபோது நிறைவேற்றிய முக்கியமான வாக்குறுதிகளில் இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1000 கலைஞர் உரிமைத் தொகை வழங்கப்படுவது. பல கட்டங்களாக இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு தமிழகம் முழுவதும் 1.31 கோடி பெண்கள் இந்த திட்டத்தின் மூலம் மாதம் ரூ.1000 பெற்று வந்தனர். இந்நிலையில் தற்போது ஆட்சிக்கு வந்துள்ள தமிழக வெற்றிக் கழகம் இந்த தொகையை ரூ.2500 ஆக உயர்த்தி வழங்குவதாக தனது தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்திருந்தது. ஆனால் தற்போது இந்த 1000 ரூபாயையே அரசு சரிவர வழங்கவில்லை என பாஜக தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள நயினார் நாகேந்திரன் கூறியுள்ளதாவது :
Buy Now ! Pay Daily !
நிறுத்தப்பட்ட உரிமைத்தொகை:
தமிழகத்தில் மகளிருக்கு மாதம் ரூ.1,000 உதவித் தொகை வழங்கும் திட்டத்தில், கடந்த 2025 டிசம்பர் மாதம் சிறப்பு முகாம் மூலம் இரண்டாம் கட்டமாக சேர்க்கப்பட்ட 16.94 லட்சம் பயனாளிகளில், 50 சதவீதத்திற்கும் அதிகமானோருக்குக் கடந்த மூன்று மாதங்களாக உதவித் தொகை நிறுத்தப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள புகார்கள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன. 1.31 கோடி பெண்கள் மாதந்தோறும் பயனடைந்து வந்த இத்திட்டத்தில், தற்போது லட்சக்கணக்கான ஏழைப் பெண்களின் வங்கிக் கணக்குகளுக்குப் பணம் வராமல் முடக்கப்பட்டிருப்பது திரு. விஜய் தலைமையிலான தவெக அரசின் ஏழைப் பெண்கள் மீதான அலட்சியப் போக்கை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
2026 சட்டமன்றத் தேர்தலில், “மகளிர் உரிமைத் தொகையை மாதம் ரூ.2,500 ஆக உயர்த்தி வழங்குவோம்” எனக் கவர்ச்சிகரமான வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய், கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாதது மட்டுமின்றி, ஏற்கெனவே வழங்கப்பட்டு வந்த ரூ.1,000 தொகையையும் நிறுத்தித் தமிழகப் பெண்களுக்குப் பச்சைத் துரோகம் இழைத்துள்ளார். இப்படித் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றுவது தொடர்கதையாகிவிட்டது.
தவெக அரசுக்கு கண்டனம்:
எனவே, தேர்தல் வாக்குறுதியை மீறி மகளிரை வஞ்சிக்கும் திரு. ஜோசப் விஜய் அரசின் இந்த மக்கள் விரோதப் போக்கைத் தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன். உடனடியாகப் பாதிக்கப்பட்ட அனைத்துப் பயனாளிகளுக்கும் நிறுத்தப்பட்ட கடந்த மூன்று மாதங்களுக்கான ரூ.1,000 நிலுவைத் தொகையை எவ்விதச் சாக்குப்போக்கும் இன்றி வங்கிக் கணக்கில் வரவு வைக்க வேண்டும் எனவும், தேர்தல் அறிக்கையில் உறுதியளித்தபடி மகளிருக்கு மாதம் ரூ.2,500 உதவித் தொகையைக் காலதாமதமின்றி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவரது பதிவில் அவர் தெரிவித்துள்ளார்.






