← முகப்புதிண்டுக்கல் →

திண்டுக்கல் மேம்பாலத்தில் ஆசிட் டேங்கர் லாரி விபத்து: புகைமூட்டம் சூழ்ந்ததால் பரபரப்பு!

சுண்ணாம்புக்கல் லாரி மோதியதில் ஆசிட் டேங்கரின் கேட் வால்வு உடைந்து விபத்து; நெடுஞ்சாலை மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் கடுமையான நெடி வீசியதால் போக்குவரத்து மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டது

திண்டுக்கல் மேம்பாலத்தில் ஆசிட் டேங்கர் லாரி விபத்து: புகைமூட்டம் சூழ்ந்ததால் பரபரப்பு!

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள நான்கு வழிச்சாலை மேம்பாலத்தில் ஹைட்ரோ குளோரிக் ஆசிட் ஏற்றி வந்த டேங்கர் லாரி விபத்துக்குள்ளானதில், அமிலம் கசிந்து அப்பகுதி முழுவதும் கடுமையான புகைமூட்டம் மற்றும் நெடி ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது.

தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து ஹைட்ரோ குளோரிக் ஆசிட் ஏற்றிக்கொண்டு டேங்கர் லாரி ஒன்று திண்டுக்கல் - கரூர் நான்கு வழிச்சாலை வழியாகச் சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை ஓட்டுநர் மதியழகன் என்பவர் ஓட்டி வந்தார். அதே சமயம், தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து சுண்ணாம்புக்கல் பாரம் ஏற்றிய மற்றொரு லாரி நாமக்கல் நோக்கிச் சென்று கொண்டிருந்தது.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள நான்கு வழிச்சாலை மேம்பாலத்தில் இந்த இரண்டு லாரிகளும் ஒன்றன்பின் ஒன்றாகச் சென்று கொண்டிருந்தன. அப்போது, எதிர்பாராத விதமாகப் பின்னால் வந்த சுண்ணாம்புக்கல் லாரி, முன்னால் சென்ற ஆசிட் டேங்கர் லாரியின் பின்புறத்தில் பலமாக மோதியது. இந்த மோதலில், டேங்கர் லாரியின் பின்பகுதியில் இருந்த ஆசிட் வெளியேறும் பைப் 'கேட் வால்வு' (Gate Valve) சேதமடைந்து உடைந்தது.

விபத்து ஏற்பட்டதை உணர்ந்த ஓட்டுநர் உடனடியாக டேங்கர் லாரியை நான்கு வழிச்சாலையின் ஒரு ஓரமாக நிறுத்தினார். இருப்பினும், உடைந்த கேட் வால்வு வழியாக ஹைட்ரோ குளோரிக் ஆசிட் அதிக அளவில் வெளியேறிச் சாலையில் கொட்டத் தொடங்கியது. ஆசிட் காற்றில் வினைபுரிந்ததால் நெடுஞ்சாலை மற்றும் அருகிலுள்ள குடியிருப்புப் பகுதிகளில் அடர்த்தியான புகைமூட்டம் சூழ்ந்து, மூச்சுத் திணறல் மற்றும் கண் எரிச்சலை ஏற்படுத்தும் வகையிலான கடுமையான நெடி வீசியது.

இதனால் நான்கு வழிச்சாலையில் வாகனங்கள் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தாடிக்கொம்பு காவல்துறையினர், அசம்பாவிதங்களைத் தவிர்க்க அந்த வழித்தடத்தில் வந்த வாகனங்களை உடனடியாக மாற்றுப் பாதையில் திருப்பி விட்டுப் போக்குவரத்தைச் சீர்செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

மேலும், இது குறித்துத் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த திண்டுக்கல் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினர், பாதுகாப்பு கவசங்களுடன் மீட்புப் பணியில் இறங்கினர். சாலையில் கொட்டிய ஆசிட்டின் வீரியத்தைக் குறைக்கவும், புகைமூட்டம் மற்றும் கடுமையான நெடியைக் கட்டுப்படுத்தவும் தீயணைப்பு வீரர்கள் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாகத் தொடர்ந்து தண்ணீரைப் பீய்ச்சியடித்துத் தீவிரமாகப் போராடி வருகின்றனர். இந்த விபத்து குறித்து தாடிக்கொம்பு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !