கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு, திருவண்ணாமலைக்குச் செல்லும் பக்தர்களின் பயணத்தைப் பாதுகாப்பாகவும், போக்குவரத்து நெரிசலின்றியும் அமைக்கும் வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக போக்குவரத்து ஒழுங்குமுறை, மாற்று வழித்தடங்கள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஒருங்கிணைப்புக் கூட்டம் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. அருளரசு தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் கண்காணிப்பாளர் மதிவாணன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி திருவண்ணாமலைக்குச் செல்லும் பக்தர்களின் வாகனப் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துதல், கனரக வாகனங்களுக்கான கட்டுப்பாடுகள், மாற்று வழித்தடங்கள், சரக்கு வாகனங்களின் இயக்கத்தை முறைப்படுத்துதல், கூடுதல் சிறப்புப் பேருந்துகளை இயக்குதல் உள்ளிட்டவை குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. மேலும், அவசர காலங்களில் 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் தடையின்றிச் செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
அனைத்துத் துறை அதிகாரிகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டு, பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யவும், போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் டி.ஐ.ஜி. அருளரசு அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் முருகவேல், அரசு போக்குவரத்துக் கழக விழுப்புரம் மண்டல மேலாளர் ஓம் குமரேசன், 108 அவசர ஊர்தி சேவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் மற்றும் பல்வேறு லாரி உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்
Buy Now ! Pay Daily !



