திருப்பூர் மாவட்டத்தில் கொங்குஏழு சிவ ஸ்தலங்களில் ஒன்றாக புகழ்பெற்று விளங்கும் திருமுருகன்பூண்டி திருமுருகநாதசுவாமி கோயிலில் கந்தர் சஷ்டி திருவிழா கடந்த 10ம் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. இவ்விழாவை முன்னிட்டு திருமுருகநாதசுவாமி கோயிலில் தினசரி காலை மாலை சிறப்பு பூஜைகள் நடைபெற்று, சுவாமிக்கு அபிஷேகம் மற்றும் அலங்காரமும் நடைபெற்று வந்தது. நேற்று முருகப்பெருமான் நான்கு வீதி சுத்தி சூரனை வதம் செய்தார். இன்று காலை திருக்கல்யாணத்திற்காக திருமுருகநாதர் கோயில் திருமண மண்டபத்தில் வள்ளி தெய்வானை உடனமர் சண்முகநாதன் எழுந்தருளினார். வேத மந்திரங்கள் முழங்க மங்கள வாத்தியத்துடன் சண்முகநாதர் வள்ளி தெய்வானைக்கு திருமாங்கல்யம் கட்டும் வைபவம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு மகா தீபாராதனை நடைபெற்றது. பக்தர்கள் அனைவரும் அட்சதை தூவி அரோகரா கோஷத்தோடு சண்முகநாதரை வழிபட்டனர். பக்தர்கள் அனைவருக்கும் திருமாங்கல்ய பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் பக்தர்கள் மொய் பணம் எழுதுதல், பாத காணிக்கையை அடுத்து, வெள்ளையானை வாகனத்தில் வள்ளிதெய்வானையுடன் சுப்பிரமண்ய சுவாமி திருவீதி உலா கோலாகலமாக நடைபெறவுள்ளது. திருக்கல்யாணத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. திருமுருகன்பூண்டி போலீசார் மற்றும் அவிநாசி தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
திருப்பூர் திருமுருகநாத சாமி கோவில் திருக்கல்யாணம்!
கந்த சஷ்டி நிறைவு நாள் திருமுருகன்பூண்டி திருமுருகநாதர் சுவாமி கோயிலில் சண்முகநாதர், வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் விமர்சையாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கானோர் சாமி தரிசனம் செய்தனர்.




