ஐபிஎல் தொடரின் 20-வது சீசனுக்காக மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக யார் நியமிக்கப்படுவார் என்ற கேள்வி, மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் ஐபிஎல் 2027 க்கான தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியை ரோஹித் சர்மா வழிநடத்துவார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
Buy Now ! Pay Daily !
கடந்த சில சீசன்களாக மும்பை அணியின் கேப்டனாகச் செயல்பட்ட ஹர்திக் பாண்டியா, பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு டிரேட் செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே மும்பை அணிக்கு 5 ஐபிஎல் கோப்பைகளை வென்று கொடுத்த ரோஹித் சர்மா, இந்த முறையும் 6வது கோப்பையை வென்று புதிய சாதனை படைப்பார் என ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
ரோஹித் சர்மாவின் கேப்டன்சி பயணம்
2011-ம் ஆண்டு முதல் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வரும் ரோஹித் சர்மா, தனது அதிரடி ஆட்டத்தால் 'ஹிட்மேன்' எனப் பெயர் பெற்றவர்.
2023-ம் ஆண்டுக்குப் பிறகு கேப்டன் பொறுப்பிலிருந்து மாற்றப்பட்ட அவர், தற்போது மீண்டும் அணியை வழிநடத்தவுள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் அணியின் நீண்ட கால கேப்டனாக இருந்த ரோஹித், ஐபிஎல் மற்றும் சாம்பியன்ஸ் லீக் டி20 தொடர்கள் உட்பட மொத்தம் 163 போட்டிகளில் அணியை வழிநடத்தியுள்ளார். இதில் 93 வெற்றிகளையும், 70 தோல்விகளையும் மும்பை அணி பதிவு செய்துள்ளது.
2013-ம் ஆண்டு கேப்டனாகப் பொறுப்பேற்ற முதல் ஆண்டிலேயே மும்பை அணிக்கு முதல் ஐபிஎல் கோப்பையை வென்று கொடுத்தார்.
அதனைத் தொடர்ந்து 2013, 2015, 2017, 2019 மற்றும் 2020 ஆகிய 5 இறுதிப் போட்டிகளில் அணியை வழிநடத்தி, ஐந்திலும் கோப்பையை வென்று அசத்தினார்.
ஐபிஎல் வரலாற்றில் 5 கோப்பைகளை வென்ற கேப்டன்கள் என்ற பெருமையை ரோஹித் சர்மாவும், எம்.எஸ். தோனியும் மட்டுமே பகிர்ந்து கொண்டுள்ளனர்.
பேட்டிங் சாதனைகளும் சறுக்கல்களும்
மும்பை அணியின் அதிகபட்ச ரன் குவிப்பாளரான ரோஹித் சர்மா, ஐபிஎல் தொடரில் 6,000 ரன்களுக்கும் மேல் குவித்த நான்கு வீரர்களில் ஒருவராவார். 2013-ம் ஆண்டு சாம்பியன் பட்டம் வென்ற தொடரில் அவர் 538 ரன்கள் குவித்ததே அவரது சிறந்த சீசனாக அமைந்தது.
2020-ம் ஆண்டு சாம்பியன் பட்டம் வென்ற பிறகு மும்பை அணியின் செயல்பாடு சற்று சரிவைச் சந்தித்தது. 2021-ல் 5-வது இடமும், 2022-ல் புள்ளிப்பட்டியலில் கடைசி இடமும் பிடித்த மும்பை அணி, 2023-ல் தகுதிச் சுற்று 2-ல் தோல்வியடைந்தது.
அதன்பின் ஹர்திக் பாண்டியா தலைமையிலும் அணியின் செயல்பாட்டில் முன்னேற்றம் ஏற்படவில்லை. ஹர்திக்கின் சொந்த ஃபார்ம் மற்றும் அணியின் தொடர் தோல்விகள் காரணமாக, அர்ஷ்தீப் சிங்கிற்குப் பதிலாக ஹர்திக் பஞ்சாப் அணிக்கு மாற்றப்பட்டார்.
மறுபுறம், ரோஹித் சர்மாவும் பேட்டிங்கில் சற்று தடுமாறினாலும், கடந்த சீசனில் 44 பந்துகளில் 84 ரன்கள் விளாசி தனது பழைய அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
சூர்யகுமார் யாதவின் நெகிழ்ச்சியான பதிவு
ஹர்திக் பாண்டியாவின் வெளியேற்றம் மற்றும் கைரன் பொல்லார்ட் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஐபிஎல் 2027 தொடருக்கான மும்பை அணியின் அடுத்த கேப்டன் யார் என்ற எதிர்பார்ப்பு பல மாதங்களாக நிலவியது.
டி20 உலகக் கோப்பை வென்ற கேப்டனான சூர்யகுமார் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் திலக் வர்மா ஆகியோரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்ட போதிலும், அனுபவமிக்க ரோஹித் சர்மாவையே அணி நிர்வாகம் மீண்டும் தேர்வு செய்துள்ளது.
கேப்டன் வாய்ப்பு கைநழுவிய போதிலும், ரோஹித் சர்மாவின் நியமனத்தை சூர்யகுமார் யாதவ் மனதார வரவேற்றுள்ளார். முதலில் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் நீல நிற இதயங்களைப் பகிர்ந்த அவர், மற்றொரு ஸ்டோரியில் "தலைவர். சகோதரர். வழிகாட்டி." என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
கடந்த கால ஏமாற்றங்களை மறந்து, ரோஹித் சர்மாவின் தலைமையில் மும்பை இந்தியன்ஸ் அணி மீண்டும் வெற்றிப் பாதைக்குத் திரும்பும் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் உள்ளனர்.






