← முகப்புகரூர் →

கரூரில் செல்போன் வெளிச்சத்தில் இறுதிச்சடங்கு நடக்கும் அவலம்!

கரூர் வெங்கமேடு பகுதியில் உள்ள பொது சுடுகாட்டில் மின்விளக்கு வசதி இல்லாததால், உயிரிழந்த இளைஞரின் இறுதிச்சடங்கு செல்போன் வெளிச்சத்தில் நடைபெற்றது. கோடிக்கணக்கில் பட்ஜெட் ஒதுக்கியும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தாத கரூர் மாநகராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்திற்கு பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

கரூர் வெங்கமேடு என்.எஸ்.கே நகர் பகுதியைச் சேர்ந்த அரசு என்ற இளைஞர் உடல்நலக்குறைவால் கடந்த நவம்பர் 20ஆம் தேதி உயிரிழந்தார். அவரது உடலை அன்றிரவு 7 மணியளவில் அப்பகுதியில் உள்ள பொது சுடுகாட்டில் அடக்கம் செய்ய உறவினர்கள் சென்றனர். ஆனால், சுடுகாட்டில் போதிய மின்விளக்கு வசதி இல்லாததால், செல்போன் வெளிச்சத்திலேயே இறுதிச்சடங்குகளைச் செய்ய வேண்டிய அவலநிலை ஏற்பட்டது. இந்தச் சம்பவம் கரூர் மாநகராட்சி நிர்வாகத்தின் அடிப்படை வசதிகள் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.

கரூர் மாநகராட்சியின் அலட்சியப் போக்கால் மின்விளக்கு இல்லாமல் செல்போன் வெளிச்சத்தில் இறுதிச்சடங்கு நடந்த அவலம்
கரூர் மாநகராட்சியின் அலட்சியப் போக்கால் மின்விளக்கு இல்லாமல் செல்போன் வெளிச்சத்தில் இறுதிச்சடங்கு நடந்த அவலம்
Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

கோடிக்கணக்கான பட்ஜெட் - அடிப்படை வசதிகள் எங்கே?

கரூர் மாநகராட்சியின் 2026-27ஆம் நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்ட அறிக்கையில், பொது நிதி வருவாய் ரூ.859.89 கோடியாகவும், செலவினம் ரூ.878.57 கோடியாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், குடிநீர், வடிகால் மற்றும் ஆரம்பக் கல்வி நிதி உள்ளிட்டவற்றையும் சேர்த்து மொத்த வருவாய் ரூ.1,020.81 கோடியாகவும், மொத்த செலவு ரூ.1,058.50 கோடியாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வளவு பெரிய நிதி ஒதுக்கீடுகளுடன் மாநகராட்சி நிர்வாகம் செயல்பட்டு வரும் நிலையில், பொதுமக்கள் பயன்படுத்தும் பொது சுடுகாட்டில் மின்விளக்கு வசதிகூட இல்லாதது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

முழுமையடையாத அடிப்படை வசதிகள்

கரூர் நகராட்சியாக இருந்து மாநகராட்சியாகத் தரம் உயர்த்தப்பட்டாலும், பல பகுதிகளில் பாதாள சாக்கடைத் திட்டப் பணிகள் இன்னும் முழுமையடையவில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மாநகராட்சியின் 48 வார்டுகளிலும் இத்திட்டப் பணிகள் முழுமையாகத் தொடங்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. மக்கள் வரிப்பணத்தில் இயங்கும் மாநகராட்சி நிர்வாகம், பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளுக்கே உரிய முக்கியத்துவம் அளிக்கவில்லை என்ற விமர்சனமும் எழுந்துள்ளது.

எனவே, பொது சுடுகாட்டில் உடனடியாக மின்விளக்குகள் அமைப்பதுடன், மாநகராட்சிப் பகுதிகளில் நிலவும் அடிப்படை வசதிக் குறைபாடுகளையும் சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !