இந்தியர்களின் அன்றாட உணவுப் பழக்கத்தில் சாதத்திற்கு முக்கியமான இடம் உண்டு. குறிப்பாக தென்னிந்திய வீடுகளில் காலை, மதியம், இரவு எனப் பல நேரங்களிலும் சாதம் உணவாகப் பயன்படுத்தப்படுகிறது. சில நேரங்களில் வீட்டில் சமைத்த சாதம் மீதமாகிவிடும். அதை வீணாக்க விரும்பாத பலரும் ஒரு பாத்திரத்தில் போட்டு ஃபிரிட்ஜில் வைத்துவிட்டு, மறுநாள் அல்லது அதற்கடுத்த நாட்களில் மீண்டும் சூடுபடுத்திச் சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
ஆனால், சமைத்த சாதத்தை எவ்வளவு நாட்கள் ஃபிரிட்ஜில் வைத்திருக்கலாம்? நீண்ட நாட்கள் வைத்துச் சாப்பிட்டால் உடல்நலத்திற்கு பாதிப்பு ஏற்படுமா? மீண்டும் சூடுபடுத்திச் சாப்பிடுவது பாதுகாப்பானதா? இதுபோன்ற கேள்விகளுக்குப் பின்னால் முக்கியமான உணவுப் பாதுகாப்பு விஷயங்கள் உள்ளன.
Buy Now ! Pay Daily !
சமைத்த சாதத்தை எவ்வளவு நாட்கள் வைத்திருக்கலாம்?
சமைத்த சாதத்தைச் சரியான முறையில் குளிர்வித்து, குளிர்சாதனப் பெட்டியில் பாதுகாப்பாக வைத்திருப்பது அவசியம். உணவுப் பாதுகாப்பு வழிகாட்டுதல்களின்படி, சாதத்தைச் சமைத்தவுடன் நீண்ட நேரம் வெளியில் வைக்காமல் விரைவாகக் குளிர்வித்து ஃபிரிட்ஜில் வைக்க வேண்டும்.
பிரிட்டன் அரசின் உணவுப் பாதுகாப்பு வழிகாட்டுதலின்படி, சமைத்த சாதத்தை ஃபிரிட்ஜில் வைத்தால் 24 மணி நேரத்திற்குள் பயன்படுத்துவது பாதுகாப்பான நடைமுறையாகும். அதேசமயம், நியூசிலாந்து உணவுப் பாதுகாப்புத் துறை சரியான முறையில் குளிர்வித்து சேமிக்கப்பட்ட சாதத்தை இரண்டு நாட்களுக்குள் பயன்படுத்த அறிவுறுத்துகிறது.
பொதுவாக மற்ற சமைத்த உணவுகளுக்கு 3 முதல் 4 நாட்கள் வரை சேமிப்பு வழிகாட்டுதல்கள் இருந்தாலும், சாதத்தில் உருவாகக்கூடிய குறிப்பிட்ட பாக்டீரியாக்களைக் கருத்தில் கொண்டு குறுகிய காலத்திற்குள் பயன்படுத்துவதே சிறந்தது.
சாதத்தில் உருவாகும் ஆபத்தான பாக்டீரியா எது?
சமைக்காத அரிசியில் இயற்கையாகவே 'Bacillus cereus' என்ற பாக்டீரியாவின் விதைநிலைகள் (Spores) இருக்கக்கூடும். அரிசியை நன்றாக வேகவைத்தாலும், இந்த Spores முழுமையாக அழியாமல் உயிர்வாழ வாய்ப்புள்ளது.
சமைத்த சாதத்தை நீண்ட நேரம் அறை வெப்பநிலையில் வைத்திருக்கும்போது, இந்த பாக்டீரியாக்கள் வளர்ந்து நச்சுப் பொருட்களை உருவாக்கக்கூடும். இதனைச் சாப்பிடுவதால் உணவு நச்சுத்தன்மை பாதிப்பு ஏற்படலாம்.
குறிப்பாக வாந்தி, குமட்டல், வயிற்றுவலி மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகள் ஏற்படலாம். சிலருக்கு உணவு சாப்பிட்ட சில மணி நேரங்களிலேயே பாதிப்பு தெரியத் தொடங்கலாம்.
முக்கியமாக, சாதத்தை மீண்டும் சூடுபடுத்தினால் ஏற்கெனவே உருவான நச்சுப் பொருட்கள் அனைத்தும் அழிந்துவிடும் என்று நினைக்கக்கூடாது. எனவே, சாதத்தைச் சேமிக்கும் முறையில்தான் அதிக கவனம் தேவை.
சாதத்தை ஃபிரிட்ஜில் வைக்கும் சரியான முறை
மீதமான சாதத்தை அப்படியே பெரிய பாத்திரத்தில் போட்டு ஃபிரிட்ஜில் வைப்பதைவிட, சில பாதுகாப்பான வழிமுறைகளைப் பின்பற்றுவது நல்லது.
சிறிய பாத்திரங்களில் பிரித்து வைக்கவும்: அதிக அளவு சாதத்தை ஒரே பாத்திரத்தில் வைக்காமல் சிறிய, ஆழம் குறைந்த பாத்திரங்களில் பிரித்து வைக்க வேண்டும். இதனால் சாதம் விரைவாகக் குளிரும்.
விரைவாக ஃபிரிட்ஜில் வைக்கவும்: சாதத்தை நீண்ட நேரம் சமையலறையில் வைத்திருக்கக் கூடாது. சமைத்த ஒரு மணி நேரத்திற்குள் குளிர்வித்து ஃபிரிட்ஜில் வைப்பது சிறந்த பாதுகாப்பு நடைமுறையாகும்.
மூடிய பாத்திரத்தைப் பயன்படுத்தவும்: சாதத்தைச் சுத்தமான, காற்று புகாத மூடியுள்ள பாத்திரத்தில் சேமிக்க வேண்டும். இதனால் மற்ற உணவுகளிலிருந்து மாசுபடுவதற்கான வாய்ப்பு குறையும்.
ஃபிரிட்ஜின் வெப்பநிலையைக் கவனிக்கவும்: ஃபிரிட்ஜின் வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸுக்குக் கீழ் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். 4 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்குக் குறைவாக வைத்திருப்பது சிறந்தது.

மீண்டும் சூடுபடுத்திச் சாப்பிடலாமா?
ஃபிரிட்ஜில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட சாதத்தை மீண்டும் சூடுபடுத்திச் சாப்பிடலாம். ஆனால், அதற்கும் சில விதிமுறைகள் உள்ளன. சாதத்தை மைக்ரோவேவ் அல்லது அடுப்பில் சூடுபடுத்தும்போது அனைத்து பகுதிகளும் நன்றாக ஆவி வரும் அளவிற்குச் சூடாக வேண்டும். மைக்ரோவேவில் சூடுபடுத்தினால் இடையிடையே கிளறி, எல்லாப் பகுதிகளிலும் சமமாக வெப்பம் பரவுவதை உறுதிப்படுத்த வேண்டும்.
மேலும், ஒருமுறை சூடுபடுத்திய சாதத்தை மீண்டும் குளிர்வித்து ஃபிரிட்ஜில் வைத்து மறுபடியும் சூடுபடுத்துவதைத் தவிர்க்க வேண்டும். சாப்பிடத் தேவையான அளவு சாதத்தை மட்டும் தனியாக எடுத்து சூடுபடுத்துவது நல்லது.
சாதத்தை ஃப்ரீசரில் வைக்கலாமா?
உடனடியாகப் பயன்படுத்த முடியாத மீதமான சாதத்தை ஃப்ரீசரில் சேமிக்கலாம். இதற்காக சாதத்தைச் சிறிய அளவுகளாகப் பிரித்து, விரைவாகக் குளிர்வித்து மூடியுள்ள ஃப்ரீசர் பாத்திரங்களில் வைக்க வேண்டும்.
ஃபிரிட்ஜில் வைத்த உணவை சாப்பிடுவதற்கு முன்பு நன்றாக அதன் குளிர் தன்மை போகும்வரை வெளியில் வைக்க வேண்டும், பின்னர் நன்றாகச் சூடுபடுத்த வேண்டும். அறை வெப்பநிலையில் நீண்ட நேரம் வைத்திருந்து உருகச் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
பழைய சாதம் கெட்டுப்போனதை எப்படிக் கண்டறிவது?
சாதத்தில் துர்நாற்றம் வீசுவது, நிறம் மாறுவது, பிசுபிசுப்புத் தன்மை ஏற்படுவது அல்லது பூஞ்சை காணப்படுவது போன்றவை கெட்டுப்போனதற்கான அறிகுறிகளாக இருக்கலாம். சில நேரங்களில் சாதம் நீல நிறம் அல்லது ஊதா நிறத்தில் இருக்கலாம், இப்படி நிறம் தெரிந்தால் அது சாப்பிட முழுக்க முழுக்க தகுதியற்றது.
ஆனால், ஒரு முக்கியமான விஷயத்தை நினைவில் கொள்ள வேண்டும். Bacillus cereus பாக்டீரியா மற்றும் அதன் நச்சுப் பொருட்கள் இருந்தாலும் சாதத்தின் நிறம், வாசனை அல்லது சுவையில் மாற்றம் தெரியாமல் இருக்கலாம். எனவே, பார்த்தோ அல்லது முகர்ந்தோ மட்டுமே சாதம் பாதுகாப்பானது என்று முடிவு செய்யக்கூடாது. சரியான நேரத்தில் ஃபிரிட்ஜில் வைக்கப்படாத சாதத்தை மீண்டும் சூடுபடுத்திச் சாப்பிடுவதும் பாதுகாப்பான தீர்வாகாது.
இந்த விஷயங்களில் கவனமாக இருங்கள்
- சமைத்த சாதத்தை நீண்ட நேரம் அறை வெப்பநிலையில் வைக்காதீர்கள்.
- மீதமான சாதத்தை விரைவாகக் குளிர்வித்து ஃபிரிட்ஜில் வையுங்கள்.
- சாதத்தை 24 மணி நேரத்திற்குள் பயன்படுத்துவது சிறந்தது.
- ஒருமுறை சூடுபடுத்திய சாதத்தை மீண்டும் மீண்டும் சூடுபடுத்தாதீர்கள்.
- சாதம் பாதுகாப்பாகச் சேமிக்கப்பட்டதா என்பதில் சந்தேகம் இருந்தால் சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.
மொத்தத்தில், உணவை வீணாக்கக்கூடாது என்பதற்காக மீதமான சாதத்தைப் பல நாட்கள் சேமித்து வைப்பது நல்ல பழக்கம் அல்ல. சரியான முறையில் குளிர்வித்தல், சேமித்தல் மற்றும் சூடுபடுத்துதல் ஆகியவற்றைப் பின்பற்றினால் உணவு நச்சுத்தன்மை ஏற்படும் அபாயத்தைக் குறைக்கலாம். குறிப்பாக குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக உள்ளவர்கள் உணவுப் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.






