← முகப்புதிருநெல்வேலி →

அம்மா இருந்தா எவனும் வால் ஆட்ட முடியாது! ஜெயகுமார் பரபரப்பு பேட்டி

அன்று விஜய்யைப் பார்த்து ரீல்ஸ் மூலம் ஓட்டு போட்டார்கள், அது தற்காலிகமாக எடுபட்டது. இனிமேல் விஜய்யைப் பார்த்தாலும் மக்கள் ஓட்டு போட மாட்டார்கள். அவருக்கு ஓட்டு போட்ட குடும்பங்கள் இன்று விலைவாசி உயர்வு, பால் விலை உயர்வு, மின் கட்டண உயர்வு மற்றும் பாதுகாப்பற்ற சூழலால் பாதிக்கப்பட்டு அச்சத்துடன் வாழ்கின்றன. பாதிப்பு வரும்போது மக்கள் சிந்திப்பார்கள் விரைவில் இந்த ஆட்சிக்கு மூடுவிழா நடத்தும் சூழல் ஏற்படும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் நெல்லையில் தெரிவித்துள்ளார்.

அம்மா இருந்தா எவனும் வால் ஆட்ட முடியாது! ஜெயகுமார் பரபரப்பு பேட்டி

தமிழகத்தின் ஒட்டுமொத்த சட்டம் - ஒழுங்கு சூழ்நிலை படுமோசமாகி அதள பாதாளத்திற்குச் சென்றுவிட்டது. முதலமைச்சர் சட்டம் - ஒழுங்கு குறித்து ஆய்வு நடத்திக் கொண்டிருக்கும் போதே, தீபாவளி சமயத்தில் மட்டும் அடுத்தடுத்து 17 கொலைகள் நடந்துள்ளன. இதனை நியாயப்படுத்தும் விதமாக, எல்லா ஆட்சியிலும் நடப்பது போல் எங்கள் ஆட்சியிலும் நடக்கிறது என அமைச்சர் நிர்மல்குமார் பேசியுள்ளார். கொலைகளைக் கூடவா ஆட்சியுடன் ஒப்பிட்டுப் பேசுவார்கள் . அவர்கள் ஆட்சியில் நடந்தது, எங்கள் ஆட்சியில் இல்லை எனக் கூறி இரும்புக்கரம் கொண்டு அடக்கினால் அதை ஏற்றுக்கொள்ளலாம்.

அதை விடுத்து, உங்கள் ஆட்சியில் 10 கொலை, எங்கள் ஆட்சியில் 9 கொலை 15 கொலைக்கு 14 கொலை' எனப் புள்ளிவிவரம் சொல்வதற்காகவா மக்கள் மாற்றத்தைத் தேடி வாக்களித்தார்கள் தற்போது தமிழகத்தில் கொலை கொலையா முந்திரிக்கா என்பது போலக் கொலைகள் சர்வ சாதாரணமாகிவிட்டன. ஒருபுறம் கொலைகள் என்றால், மறுபுறம் துப்பாக்கி கலாச்சாரமும் தலைதூக்கியுள்ளது. ஆய்வு நடத்தப்படும் நேரத்திலேயே மதுரையில் பூட்டைக் கூட உடைக்காமல் ரூ.50 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. பலாப்பழத்தை வெளியே முழுதாக வைத்துக்கொண்டு உள்ளே சுளையை மட்டும் எடுப்பது போல, 'தோலிருக்க சுளை விழுங்கும்' கதையாகக் கன்னக்கோல் திருடர்கள் வந்துவிட்டார்கள்.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

மறுபுறம் சிறையிலிருந்து கைதிகள் தப்பியோடும் சம்பவங்கள், லாக்-அப் மரணங்கள் மற்றும் சிறை மரணங்கள் தொடர்கின்றன. சில அரசுத் துறைகளில் இருந்து ரூ.22 கோடி அரசுப் பணம் 'ஹேக் செய்யப்பட்டுச் சுருட்டப்பட்டுள்ளது. டாஸ்மாக் வசூல் பணம் ரூ.1.5 கோடி காரில் கொண்டு செல்லப்பட்டபோது, அதில் ஒன்றரை, இரண்டு லட்சத்தைக் கீழே போட்டுவிட்டு மீதிப் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். வீட்டை விட்டு வெளியே செல்லும் சாதாரண குடிமகன் பாதுகாப்பாக வீடு திரும்ப வேண்டும், அரசு இரும்புக்கரம் கொண்டு சட்டம் - ஒழுங்கைப் பாதுகாக்கும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு. ஆனால், உள்துறையைத் தன் வசம் வைத்திருக்கும் முதலமைச்சர், ஒருநாள் கூட செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளிக்காமல் பயப்படுகிறார். "பேய் அறைந்தவர்கள் போல முகத்தை வைத்துக்கொண்டு இருக்கிறார்." மக்கள் அளித்த மிகப்பெரிய பொறுப்பை உணர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கமளித்து, அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்தி அமைதியை நிலைநாட்ட வேண்டும்.

அனைத்து மாவட்டங்களிலும் அரிசி விலை 100 சதவீதம் உயர்ந்துள்ளது ரூ.30-க்கு விற்ற அரிசி தற்போது ரூ.60 ஆக உயர்ந்துள்ளது. ஜெயலலிதா ஆட்சியில் பை நிறைய மளிகை சாமான் வாங்க சிறிது பணம் கொண்டு போனால் போதும் ஆனால் இப்போது பை நிறைய பணம் கொண்டு போனால்தான் கொஞ்சம் சாமான் வாங்க முடிகிறது. அரிசி விலை உயர்ந்தால் ஆட்சி கவிழும். மற்ற மாநிலங்கள் குறைந்த விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்யும்போது, தமிழகத்தில் மின் கட்டணத்தைப் பல மடங்கு உயர்த்தியதுடன், யூனிட் ரூ.31 முதல் ரூ.41 வரை கொடுத்து மின்சாரம் வாங்குவதில் சந்தேகம் எழுந்துள்ளது. நூலகங்கள் உட்படப் பல துறைகளில் ஊழல் நடப்பதும், ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி குற்றம்சாட்டுவதும் தொடர்கிறது.

அம்மாவின் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட லேப்டாப், தாய்மாமன் சீர் போன்ற திட்டங்களைக் காப்பியடித்து வெற்றித் திட்டம் என்கிறார்களே தவிர, புதியதாக எந்தத் திட்டத்தையும் இவர்கள் கொண்டுவரவில்லை. தமிழகத்தில் 'அம்மாவின் ஆட்சி' நடப்பதாக அமைச்சர்கள் கூறுவது, அதிமுக வாக்குகளைப் பெறுவதற்கான பசப்பு வார்த்தையே தவிர வேறொன்றுமில்லை. அம்மாவின் ஆட்சியில் இப்படி விலைவாசி விண்ணைத் தொட்டதா? சிறையிலிருந்து 17 பேர் தப்பி ஓடினார்களா? தவறு செய்தால் வீட்டிற்குப் போவதற்குள் மந்திரி பதவி, கொடி, கார் எல்லாம் பறிபோகும். இவர்களால் சொந்தக் கட்சி எம்.எல்.ஏ.க்களையே கட்டுப்படுத்த முடியவில்லை.

மாவட்ட ஆட்சியருக்குக் குறுஞ்செய்தி மூலம் மிரட்டல் விடுத்த எம்.எல்.ஏ.க்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல், தீபாவளிக்கு அவர்களை அழைத்துப் பட்டுச் சேலை, பட்டு வேட்டி, இனிப்பு கொடுத்துள்ளார்கள். வெற்று காகிதங்களில் கையெழுத்து வாங்கியதாக ஊடகங்களில் செய்திகள் வருகின்றன. அம்மாவாக இருந்திருந்தால் உடனடியாக வழக்குப் போட்டு உள்ளே தள்ளியிருப்பார்; 1991-லிருந்து அடங்காதவர்களை அடக்கிய வரலாறு எங்களுக்கு உண்டு. பொதுமக்கள் நன்மையே எங்களுக்கு முக்கியம்.

பணவீக்கத்தில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடத்தில் இருப்பதாகவும், வெங்காயம் உள்ளிட்ட பொருட்களின் விலை 111 சதவீதம் உயர்ந்துள்ளதாகவும் மத்திய அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. ஆனால், விலைவாசி குறித்துத் தவெக அரசுக்கோ, முதலமைச்சர் விஜய்க்கோ, உணவுத்துறை அமைச்சருக்கோ எந்தக் கவலையும் இல்லை. இவர்கள் 'ரீல்ஸ்' மோகத்தில் இருக்கிறார்களே தவிர, 'ரியாலிட்டியில்' இல்லை. அன்று விஜய்யைப் பார்த்து ரீல்ஸ் மூலம் ஓட்டு போட்டார்கள்; அது தற்காலிகமாக எடுபட்டது.

இனிமேல் விஜய்யைப் பார்த்தாலும் மக்கள் ஓட்டு போட மாட்டார்கள். 'விஜய் அண்ணா' என ஓட்டு போட்ட குடும்பங்கள் இன்று விலைவாசி உயர்வு, பால் விலை உயர்வு, மின் கட்டண உயர்வு மற்றும் பாதுகாப்பற்ற சூழலால் பாதிக்கப்பட்டு அச்சத்துடன் வாழ்கின்றன. பாதிப்பு வரும்போது மக்கள் சிந்திப்பார்கள்; விரைவில் இந்த ஆட்சிக்கு மூடுவிழா நடத்தும் சூழல் ஏற்படும். பெருந்தலைவர் காமராஜர் ஆட்சி, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். ஆட்சி, அம்மா ஆட்சி ஆகிய மூன்றையும் இவர்களுடன் ஒப்பிடவே கூடாது. மந்திரி பதவி கொடுத்ததற்காகத் தாளம் தட்டி, துதி பாடி, வெண்சாமரம் வீசும் வேலையை காங்கிரஸ் செய்து வருகிறது.

ஊழலற்ற ஆட்சி ஊழலற்ற ஆட்சி நடத்துவதாகத் தவெகவினர் கூறுவது பொய். முன்பு அலுவலகங்களில் நேரடியாகப் பணம் வாங்கினார்கள்; இப்போது வேறு வழிகளில் வாங்குகிறார்கள். முன்பு ஒரு சான்றிதழுக்கு ரூ.500 கொடுத்தால், இப்போது ரூ.1,000 கொடுக்க வேண்டிய நிலைக்கு ஊழல் இரட்டிப்பாகியுள்ளது. நீங்கள் வந்தால் அதை நிரூபித்துக் காட்டுகிறேன். அம்பாசமுத்திரம் தொகுதியில் சீமான் போட்டியிட்டு அனைவரிடமும் ஆதரவு கேட்கப் போவதாகக் கூறியுள்ளார். பொது வேட்பாளரை ஆதரிப்பதா, அம்பாசமுத்திரத்தில் அதிமுகவின் நிலைப்பாடு என்ன என்பது கட்சியின் கொள்கை முடிவு. அதுகுறித்து கட்சித் தலைமையே முடிவெடுக்கும்.

தவெகவை வீழ்த்த அனைவரும் ஒன்றிணைய வேண்டுமா எனச் சிலர் கூறுகிறார்கள். ஆனால், அதிமுகவைப் பொறுத்தவரை அப்படி இல்லை. 31 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்த கட்சியான அதிமுகவிற்குத் தனித்துவமும் மகத்துவமும் உண்டு; எதிர்காலத்திலும் ஆளப்போகும் கட்சி அதிமுக. நாங்கள் யாருக்கும் அஞ்சியதில்லை; எதையும் தனியாகச் சந்திக்கத் தயாராக இருக்கிறோம் என கூறினார்.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !