ஈரோடு மாவட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சிலைகள், அரசு நூலகம் மற்றும் அரசியல் கட்சி அலுவலகத்தின் கண்ணாடிகளை உடைத்துச் சேதப்படுத்திய 26 வயது இளைஞரைப் போலீசார் கைது செய்துள்ளனர். மதுபோதையில் இந்தச் சம்பவங்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள சிலைகள் மற்றும் கட்டடங்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டிருப்பதாகக் காவல்துறையினருக்குப் புகார்கள் கிடைத்தன. இதையடுத்து, சம்பவ இடங்களுக்குச் சென்ற போலீசார் விசாரணையைத் தொடங்கினர்.
Buy Now ! Pay Daily !
அதில், ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா மற்றும் மொடக்குறிச்சி ஆலங்காட்டு வலசு ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள கருணாநிதியின் சிலைகளைச் சுற்றியுள்ள கண்ணாடிப் பேழைகள் உடைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. மேலும், அரசு நூலகம் மற்றும் கட்சி அலுவலகத்தின் கண்ணாடிகளும் சேதப்படுத்தப்பட்டிருந்தன.
இதனைத் தொடர்ந்து, சம்பவம் நடைபெற்ற பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளைப் போலீசார் ஆய்வு செய்தனர். அதில், மர்ம நபர் ஒருவர் அடுத்தடுத்து பல இடங்களுக்குச் சென்று கண்ணாடிகளை உடைத்துச் சேதப்படுத்துவது பதிவாகியிருந்தது.
சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தீவிர விசாரணை நடத்திய போலீசார், இந்தச் சம்பவங்களில் ஈடுபட்டது மொடக்குறிச்சி எழுமாத்தூர் தொட்டிபாளையம் புதூரைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணனின் மகன் ஹரி விக்னேஷ் (26) என்பதை அடையாளம் கண்டனர்.
விசாரணையில், சம்பவத்தன்று இரவு மதுபோதையில் இருந்த ஹரி விக்னேஷ், முதலில் தனது சொந்த வீட்டின் கதவு மற்றும் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்துள்ளார். பின்னர், அருகில் நிறுத்தப்பட்டிருந்த கார்களின் கண்ணாடிகளையும் சேதப்படுத்தியுள்ளார். இதனைத் தொடர்ந்து, பொதுமக்கள் பயன்படுத்தும் இடங்களில் உள்ள சிலைகள், நூலகம் உள்ளிட்டவற்றின் கண்ணாடிகளையும் உடைத்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, ஹரி விக்னேஷைப் பிடித்த ஈரோடு மாவட்டக் காவல்துறையினர் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாகக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவங்கள் தொடர்பாகச் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.


