← முகப்புஈரோடு →

அமைச்சர் விஜய் பாலாஜி மீது விசைத்தறியாளர்கள் அதிருப்தி!

ஈரோட்டில் நடைபெற்ற இலவச வேட்டி, சேலை உற்பத்தித் திறனாய்வுக் கூட்டத்தில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறி, அமைச்சரைச் சந்திக்க இரண்டு மணி நேரத்திற்கும் மேலாகக் காத்திருந்த விசைத்தறியாளர்கள் ஏமாற்றமடைந்தனர்.

அமைச்சர் விஜய் பாலாஜி மீது விசைத்தறியாளர்கள் அதிருப்தி!

ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்ட நெசவாளர் கூட்டுறவு சங்கங்களின் இலவச வேட்டி, சேலை உற்பத்தித் திறனாய்வுக் கூட்டம், கைத்தறித் துறை அமைச்சர் விஜய் பாலாஜி தலைமையில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் துறைச் செயலாளர் லில்லி, கைத்தறி இயக்குநர் மற்றும் ஈரோடு, நாமக்கல் மாவட்ட ஆட்சியர்கள் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்க விசைத்தறியாளர்கள் சங்கத்தினருக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, கூட்டம் முடிந்ததும் அமைச்சரைச் சந்தித்து கோரிக்கை மனு அளிப்பதற்காக இரண்டு மணி நேரத்திற்கும் மேலாகக் காத்திருந்தனர். ஆனால், கூட்டம் முடிந்து புறப்பட்ட அமைச்சர் அவர்களைச் சந்திக்காமல் சென்றதால் விசைத்தறியாளர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர்.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த விசைத்தறியாளர்கள் சங்க நிர்வாகிகள், இந்த ஆண்டு புதிய வடிவமைப்பிலான இலவச வேட்டி, சேலை உற்பத்திப் பணிகள் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில்தான் தாமதமாகத் தொடங்கப்பட்டதாகத் தெரிவித்தனர். இதனால், அரசு நிர்ணயித்துள்ள டிசம்பர் 15ஆம் தேதிக்குள் 70 சதவீத உற்பத்தியை மட்டுமே முடிக்க முடியும் என்றும், முழுமையான உற்பத்தியை நிறைவு செய்ய அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை கால அவகாசம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

மேலும், விசைத்தறியாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் வகையில் இலவச வேட்டி, சேலைகளைத் தானியங்கி தறிகளில் உற்பத்தி செய்யும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இந்த விவகாரத்தில் முதலமைச்சர் தலையிட்டு, விசைத்தறியாளர்களின் கோரிக்கைகளைப் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !