தமிழ்நாட்டில் கடந்த முறை நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், சென்னை சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு இரண்டாவது முறையாக சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் உதயநிதி ஸ்டாலின். இந்தத் தேர்தலில் அவர் திமுக சார்பில் போட்டியிட்டு 62,992 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட தேனியைச் சேர்ந்த சுயேச்சை வேட்பாளர் பி.மிலானி வெறும் 30 வாக்குகளையே பெற்றிருந்தார்.
இந்த நிலையில், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் வெற்றி பெற்றதைச் செல்லாது என அறிவிக்கக் கோரி, சுயேச்சை வேட்பாளர் பி.மிலானி கடந்த ஜூன் 18-ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார்.
Reach our readers. Contact us to advertise in this space.
இந்த வழக்கை ஆரம்ப நிலையிலேயே நிராகரிக்கக் கோரி, எம்எல்ஏவும் எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி. அருள்முருகன் முன், உதயநிதி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன் வாதிடுகையில், "உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி தேர்தல் வழக்குகளை முடிவுகள் வெளியான நாளிலிருந்து 45 நாட்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும். அந்த நாள்கணக்கின்படி, ஜூன் 17-ஆம் தேதிக்குள் வழக்குத் தொடர்ந்திருக்க வேண்டும். ஆனால், இந்த வழக்கு ஒரு நாள் காலதாமதமாக ஜூன் 18-ஆம் தேதியில்தான் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே, சட்ட விதிகளின்படி இந்த வழக்கு நிலைக்கத்தக்கது அல்ல, இதனை உடனடியாக நிராகரிக்க வேண்டும்" என்று வாதிட்டார்.
இதற்குப் பதிலளித்த மிலானி தரப்பு வழக்கறிஞர்கள், "இந்த வழக்கு உரிய காலக்கெடுவுக்குள்தான் தொடரப்பட்டுள்ளது என்பதை உயர்நீதிமன்றப் பதிவுத் துறை ஆராய்ந்து ஏற்றுக்கொண்டுள்ளது. எனவே, இதனைத் தள்ளுபடி செய்யாமல், இது தொடர்பான விரிவான விசாரணையை நடத்த வேண்டும்" எனத் வாதிட்டனர்.
இரு தரப்பு வாதங்களையும் முழுமையாகக் கேட்டறிந்த நீதிபதி ஜி. அருள்முருகன், வழக்கின் எழுத்துப்பூர்வ வாதங்களைச் சமர்ப்பிக்க உத்தரவிட்டு, தீர்ப்பினை நவம்பர் 13-ஆம் தேதிக்கு (இன்று) தள்ளிவைத்திருந்தார். அதன்படி, உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. மேலும் வழக்கு விசாரணையை டிசம்பர் 11ம் தேதிக்கு ஒத்திவைத்தது.




