மேற்கு வங்க மாநிலம் புர்பா பர்தமான் மாவட்டத்தில் உள்ள பராஜ் கிராமத்தைச் சேர்ந்தவர் ஷம்சுதீன் மித்யா. இவரது 15 வயது மகன் முஹம்மது தல்ஹா, 9-ஆம் வகுப்பு படித்து வருகிறார். தல்ஹாவிற்கு நீண்ட நாட்களாக "BMW M4" கார் வாங்க வேண்டும் என்பது ஆசையாக இருந்துள்ளது. இதனை அறிந்த தந்தை ஷம்சுதீன், அரையாண்டு தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றால் காரை வாங்கித் தருவதாக மகனுக்கு வாக்குறுதி அளித்தார். தேர்வின் முடிவுகள் வெளியாகி, தல்ஹா நல்ல மதிப்பெண்களைப் பெற்றதைத் தொடர்ந்து, அவரது தந்தை தனது வாக்குறுதியை உடனடியாக நிறைவேற்றத் தீர்மானித்தார்.
மகனின் விருப்பத்திற்காக மும்பை வரை சென்ற ஷம்சுதீன், அங்குள்ள அந்தேரி பகுதியில் அமைந்துள்ள கார் விற்பனையகத்தில் இருந்து "BMW M4 Competition" என்கிற சொகுசு காரை வாங்கினார். பின்னர், அந்த கார் மும்பையில் இருந்து மேற்கு வங்கத்தில் உள்ள அவரது கிராமத்திற்குப் பாதுகாப்பாக கன்டெய்னர் லாரி மூலம் கொண்டு வரப்பட்டது. பின்னர் அந்த காரை மகன் தல்ஹாவிற்கு பரிசாக வழங்கினார். காரை காண்பதற்காக அப்பகுதி மக்கள் பெருமளவில் திரண்டனர்.
Reach our readers. Contact us to advertise in this space.
தற்போது இந்தச் சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மகனின் உழைப்பைப் பாராட்டி ஊக்கப்படுத்திய தந்தையின் அன்பை ஒரு தரப்பினர் பாராட்டி வருகின்றனர். அதேவேளையில், பள்ளிப் படிக்கும் 15 வயது சிறுவனுக்கு இவ்வளவு பெரிய விலையுயர்ந்த சொகுசு காரை வழங்கியது சரியா என மற்றொரு தரப்பினர் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.






