மின்சார வாகன பயன்பாட்டை ஊக்குவிக்க மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து பல முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் தமிழ்நாட்டில் மின்சார இருசக்கர வாகன தயாரிப்பை ஊக்குவிக்கும் வகையில் தமிழக தொழில் வளர்ச்சி நிறுவனமான TIDCO வாயிலாக ரூ.25 கோடியை முதலீடாக பெற்ற Raptee HV நிறுவனம் தனது மின்சார இருச்சக்கர வாகனங்களின் முதன்மை அனுபவ மையத்தை தொடங்கியுள்ளது.
இதை தமிழக முதல்வர் திரு.ஜோசப் விஜய் அவர்கள் காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். Raptee HV நிறுவனத்தின் மின் மோட்டார் பைக்குகள்240 வாட் உயர் மின்னழுத்த மின் கட்டமைப்பைக் கொண்டது. மேலும் CCS2, DC சார்ஜிங் சப்போர்ட் செய்கிறது. டெஸ்லா, விப்ரோ உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவமிக்க பொறியாளர்கள் குழு இதில் பணியாற்றியுள்ளனர்.
Reach our readers. Contact us to advertise in this space.
இந்த நிகழ்ச்சியில் தமிழக தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா, தலைமை செயலாளர் சாய் குமார், TIDCO அதிகாரிகள் மற்றும் Raptee HV நிறுவனத்தின் பிரதிநிதிகள் உள்ளிட்டோரும் கலந்துக் கொண்டனர்.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா ”சென்னை, பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள தலைமைச் செயலகத்தில், ராப்டீ எனர்ஜியின் முதல் மெகா அனுபவ மையத்தின் தொடக்க விழாவிற்காகவும், நிறுவனத்தின் 100வது மோட்டார் சைக்கிளுக்கு கையொப்பமிடும் விழாவைக் காண்பதற்காகவும் மாண்புமிகு முதலமைச்சர் திரு சி. ஜோசப் விஜய் அவர்களுடன் இணைந்திருப்பதில் மகிழ்ச்சி. தமிழ்நாட்டைச் சேர்ந்த நான்கு பொறியாளர்களால் நிறுவப்பட்ட ராப்டீ, உள்நாட்டு மின்சார வாகன தொழில்நுட்பத்தை உருவாக்கி வருகிறது. அதன் T30, இந்தியாவின் முதல் உயர் மின்னழுத்த மின்சார மோட்டார் சைக்கிள் ஆகும். TIDCO-வின் மூலோபாய முதலீட்டுடன், தமிழ்நாட்டின் உள்நாட்டு ஆழமான தொழில்நுட்ப சூழலமைப்பின் வளர்ந்து வரும் லட்சியத்தை ராப்டீ பிரதிபலிக்கிறது. முக்கிய தொழில்நுட்பங்களை உருவாக்குவது முதல் தமிழ்நாட்டில் உற்பத்தித் திறன்களைக் கட்டமைப்பது வரை, இது போன்ற புதுமை சார்ந்த வளர்ச்சியை வளர்ப்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். ராப்டீ குழுவினர் அனைவரும் தங்கள் பயணத்தைத் தொடர வாழ்த்துகிறோம்!” எனத் தெரிவித்துள்ளார்.





